×

பாதாள சாக்கடை உடைந்து சாலை நடுவில் ராட்சத பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

ஆலந்தூர்: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்க்கட்டளையில் செல்ப் ஹெல்ப் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட
தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பகுதியில் கழிவுநீர் உந்து நிலையம் உள்ளது. இங்கு வரும் கனரக வாகனங்களால் சாலைகளில் பதிக்கப்பட்டுள்ள பைப்லைன் அடிக்கடி உடைந்து விடுகிறது.

இதனால் திடக்கழிவுகள் சாலைகளில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது.  பொதுமக்களும், தொழில் புரிவோரும் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் தொழிற்பேட்டையில் பாதாள சாக்கடை பைப்லைன் திடீரென உடைந்தது. சிறு பள்ளமாக காணப்பட்ட இந்த பகுதி தற்போது பெரிய அளவில் விரிவடைந்து பள்ளத்தாக்கு போல் காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் இந்த பள்ளத்தில் திடக் கழிவுகள் தேங்கியதால், சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மின் மோட்டார் பொருத்தி கழிவுகளை உறிஞ்சி சாலையில் வெளியேற்றினர்.

தற்போது, இந்த பகுதி வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள தொழிற்சாலையில் இருந்து உற்பத்தியாகும்
பொருட்களை வெளியே கொண்டு செல்வதற்கும், புதிய ஆர்டர்களை உள்ளே கொண்டு வருவதற்கும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் தொழில் புரிவோர் சிரமப்படுகின்றனர்.   நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில்வரி போன்றவற்றை முறையாக செலுத்திய போதும்
நகராட்சி அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளதாக தொழில் புரிவோர் கூறுகின்றனர். எனவே, இந்த பாதாள சாக்கடை பள்ளத்தை சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனே பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : road , Sewer, breakage, road, traffic impact
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...