உள்ளாட்சி தேர்தலுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் 50 லட்சம் வசூல்?

* தராவிட்டால் டிரான்ஸ்பர் * மேலிட உத்தரவால் சார்பதிவாளர்கள் அச்சம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்தும் தலா 50 லட்சம் வசூல் செய்து தருமாறு மேலிடம் உத்தரவு பிறப்பித்து இருப்பது சார்பதிவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் இறுதியில் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட  விரும்புகிறவர்களிடம் அதிமுக சார்பில் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. இந்த தேர்தல் செலவுக்காக தமிழகம் முழுவதும் உள்ள 578 சார்பதிவாளர் அலுவலகங்களில் தலா 50 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று மேலிடம் சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணத்தை தராத  சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று மேலிடம் எச்சரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அனைத்து மண்டல டிஐஜிக்கள் சார்பில் அனைத்து சார்பதிவாளர்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தி இருப்பதாக  கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி சார்பதிவாளர்கள் சிலர் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் உள்ளாட்சி தேர்தலுக்கான நிதி எனக்கேட்டு பத்திரம் பதிவு செய்ய கூடுதலாக லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை  கொடுத்தால் மட்டுமே பத்திரம் பதிவு செய்வோம் என்று சார்பதிவளர் அலுவலக ஊழியர்கள் சிலரும் பொதுமக்களை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகர் மற்றும் பெரிய சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த தொகையை வசூலித்து தரும் வேளையில் இறங்கியுள்ளது. ஆனால், சிறிய அலுவலகங்களில் இது போன்று பெரிய அளவில் பணம் வசூலித்து தர  முடியாது என்பதால் அங்கு பணிபுரியும் சார்பதிவாளர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், அந்த சார்பதிவாளர்கள் இவ்வளவு பெரிய தொகையை எங்களால் தர முடியாது என்று மேலிடத்துக்கு தெரிவித்தனர். ஆனால், அவர்களை எப்படியாவது  பணம் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இது, சார்பதிவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: