13 ஆண்டுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற கொலிஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி: தமிழகத்தை சேர்ந்த பானுமதிக்கு பெருமை

புதுடெல்லி:  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றுள்ள நிலையில், 13 ஆண்டுக்குப் பிறகு கொலிஜியம் உறுப்பினராகும் பெண் நீதிபதி என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த நீதிபதி பானுமதி பெற்றுள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழுவில் ஒரு இடம் காலியானது. உச்ச நீதிமன்றத்தின் முதல் 5  மூத்த நீதிபதிகள்  கொலிஜியம் குழுவில் இடம் பெற்றிருப்பர். இக்குழுதான், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.இந்நிலையில், தலைமை நீதிபதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த பெண் நீதிபதி பானுமதி கொலிஜியம் உறுப்பினராகி உள்ளார். இக்குழுவில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் நீதிபதி ஒருவர் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.  நீதிபதி பானுமதி அடுத்த 9 மாதத்திற்கு கொலிஜியம் உறுப்பினராக இருப்பார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை 19ம் தேதியுடன் நிறைவடைகிறது. இனி, கொலிஜியம் குழுவில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள்  என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, பாலி நாரிமன், பானுமதி ஆகியோர் இருப்பர்.

நீதிபதி பானுமதி மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிபதியாக தனது பணியை தொடங்கி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் இருந்த போது, கடந்த  2014ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள 34 நீதிபதிகளில் இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி, பானுமதி ஆகிய 3 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் ஆவர்.  உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே 8 பெண் நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி உள்ளனர்.  கடைசியாக நீண்ட காலம் பணியாற்றியவரான நீதிபதி ரூமா பால், கொலிஜியம் குழுவில் இடம் பெற்றிருக்கிறார். நீதிபதிகள் பாத்திமா பீவி, சுஜாதா மனோகர், கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா தேசாய் ஆகியோர் 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே  பணியாற்றி உள்ளனர். இதுவரை தலைமை நீதிபதி பொறுப்பில் பெண்கள் யாருமே பதவி வகித்ததில்லை. உச்ச நீதிமன்றத்தில் முதல் 3 மூத்த நீதிபதிகளில் ஒருவரே தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்படுவார். நீதிபதி பானுமதியும் முதல் 3 மூத்த நீதிபதிகளில் ஒருவராக முடியாது. அவர் ஓய்வுக்குப் பிறகுதான் மற்ற 3 நீதிபதிகள் பணி ஓய்வு பெற  இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: