சென்னை விமான நிலையத்தில் 10 லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல்: 6 பேர் சுற்றிவளைத்து கைது

மீனம்பாக்கம்: கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தணிகைவேல் (26). சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த ஒன்னறை ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். தற்போது ஒரு மாத விடுமுறையில் சொந்தவூர் செல்ல முடிவு செய்தனார்.

இதையடுத்து,  கடந்த 14ம் தேதி நள்ளிரவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூப் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தார். ஆனால் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை செல்போனில் தொடர்புகொண்டபோது, சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தணிகைவேலின் தந்தை கதிர்வேலுவை செல்போனில் தொடர்புகொண்ட ஒரு மர்ம நபர், ‘‘உனது மகனை கடத்தி வைத்துள்ளோம். ₹10 லட்சம் கொடுத்தால், அவரை விடுவிப்போம். இல்லையேல், தணிகைவேலை கொலை செய்து விடுவோம்,’’ என்று மிரட்டினார். இதனால், அதிர்ச்சியடைந்த கலியமூர்த்தி, இதுபற்றி கடலூர் காவல் நிலையம் மற்றும் சென்னை விமான நிலைய போலீசாரிடம் புகார் செய்தார்.

இதையடுத்து, கடத்தல் கும்பலை பிடிக்க விமான நிலைய போலீசார் தனிப்படை அமைத்தனர். பின்னர், கலியமூர்த்தியை வைத்து கடத்தல் ஆசாமிகளுக்கு போன் செய்ய வைத்தனர்.  கலியமூர்த்தி, ‘‘தன்னிடம் 10 லட்சம் இல்லை, 7 லட்சம் தான் உள்ளது. அதை தருகிறேன். எனது மகனை விட்டு விடுங்கள்,’’ என்றார். கடத்தல் கோஷ்டியும் அதற்கு சம்மதித்தது. பின்னர், ‘‘கடந்த

சனிக்கிழமை பிற்பகல் கடலூர் நெல்லிக்குப்பம் கீரப்பாளையம் அருகே, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அம்மன் கோயில் வாசலில் 7 லட்சத்தை ஒரு பையில் போட்டு வைத்துவிட வேண்டும். நாங்கள் பணத்தை எடுத்துச் செல்வோம். பணம் எங்கள் கைக்கு வந்த ஒரு மணி நேரத்தில், அதே இடத்தில் உங்கள் மகனை விடுவிப்போம்,’’ என்றனர். கலியமூர்த்தியும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அதன்படி, கலியமூர்த்தி காகித கட்டுகளுடன் ஒரு பையை அந்த இடத்தில் வைத்துவிட்டு, நின்றார். சிறிது நேரத்தில் இரண்டு கார்கள் வேகமாக வந்து நின்றன.

அதில் இருந்து இறங்கியவர்கள் அந்த பையை எடுத்தனர். அப்போது, அருகில் மறைந்திருந்த போலீசார் துப்பாக்கி முனையில் அவர்களை மடக்கிப்பிடித்தனர். அவர்கள் வந்த ஒரு காரில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த தணிகைவேலையும் மீட்டனர். கைது செய்யப்பட 6 பேரையும், சென்னை விமான நிலைய காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் கொண்டு வந்தனர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்

வெளியானது. அதன் விவரம்:நாகப்பட்டிணத்தை சேர்ந்த சாகுல் அமீது (27). இவரது உறவினர் ஒருவர் சிங்கப்பூரில் தணிகைவேலுடன் வேலை செய்கிறார். அவர், தணிகைவேலிடம் 30 சவரன் நகைகளை கொடுத்து, ‘‘நீங்கள் ஊருக்கு சென்றதும், என்னுடைய உறவினர் வந்து நகைகளை வாங்கிச் சென்று விடுவார், என்று கூறியுள்ளார். அதன்படி, தணிகைவேல் சென்னை விமான நிலையம் வந்தவுடன், அவரை சந்தித்த சாகுல் அமீது, தனது உறவினர் கொடுத்த நகைகளை தரும்படி கேட்டுள்ளார்.  அதற்கு அவர் நான் சிங்கப்பூரில் இருந்து புறப்படும்போது, அந்த நகைகள் தொலைந்துவிட்டது என கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஷாகுல் அமீது, நாகப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் அமீது (27), முகமது இப்ராஹிம் (29), அப்துல் பாசிக் (22) பசூலூர் ரஹ்மான் (27), கடலூரை சேர்ந்த திருமலை (45) ஆகியோருடன் சேர்ந்து, தணிகைவேலை காரில் கடத்திச்சென்று, பணம் கேட்டு மிரட்டியது தெரிந்தது.  இதையடுத்து, விமான நிலைய போலீசர் 6 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், அடைத்து வைத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: