×

நல உதவி வழங்கும் விழாவால் வெடித்தது சர்ச்சை மதுரையில் அமைச்சர்கள் உச்சகட்ட மோதல்

* எனது தொகுதியில் எப்படி நடத்தலாம்? - செல்லூர் ராஜூ
* முதல்வரை நேரில் சந்தித்து புகார் கூறுவேன் - உதயகுமார்
* அதிகார மோதலில் சிக்கி அதிகாரிகள் திண்டாட்டம்

மதுரை: அமைச்சர் உதயகுமார் நடத்தும் நலத்திட்ட உதவி விழாவால் மதுரை அதிமுகவில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ‘எனது தொகுதிக்குள் வந்து எப்படி நலத்திட்ட உதவிகள் வழங்கலாம்’ என அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் எதிர்ப்பு  தெரிவித்ததால், நிகழ்ச்சியை ரத்து செய்த அமைச்சர் உதயகுமார், ‘இதுகுறித்து முதல்வரை நேரில் சந்தித்து புகார் கூறுவேன்’ என ஆவேசமாக கூறியுள்ளார். அதிகாரமையங்களின் இந்த மோதலால், மதுரை அதிகாரிகள் திண்டாட்டத்தில்  உள்ளனர்.மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், அரசின் சாதனையை விளக்குவதற்காக அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் ஜோதி ஏந்தி தொடர் நடைபயணத்தை அமைச்சர் உதயகுமார் 13ம் தேதி மதுரை ரிங்ரோட்டில் துவக்கி  வைத்தார். இதில் எம்எல்ஏக்கள் பெரியபுள்ளான், சரவணன், மாணிக்கம் மற்றும் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நாளும், 2 சட்டமன்ற தொகுதி என 5 நாட்கள் பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.ஐந்தாம் நாளான நேற்று, திருப்பரங்குன்றத்தில் இருந்து நடைபயணம் புறப்பட்டது. மதுரை மேற்கு தொகுதி மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள், பழங்காநத்தம் நடராஜ் திரையரங்கு அருகே வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று  முன்தினம் நிகழ்ச்சிக்கான மேடை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான செல்லூர் ராஜூவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைக் கேட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ அதிர்ச்சி அடைந்தார்.

‘‘எனது தொகுதியில் வந்து அமைச்சர் உதயகுமார் நலத்திட்ட உதவிகள் வழங்குவதா? அதனை நான் வேடிக்கை பார்ப்பதா? அது கூடாது. இதை நான் ஏற்க மாட்டேன். எனது தொகுதியில் விழா நடத்தினால் பெரிய பிரச்னையாகி விடும்’’ என  கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே கலெக்டரை தொடர்பு கொண்டு, ‘நலத்திட்ட உதவி விழா நடத்தக்கூடாது’ என தடைவிதித்தார். கலெக்டர் வினய் அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை.விழாவிற்கு செல்லூர் ராஜூ எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, நடைபயணம் மேற்கொண்டிருந்த உதயகுமாருக்கு கலெக்டர் தகவல் தெரிவித்தார். ‘‘முதல்வர் உத்தரவின்பேரில் நிகழ்ச்சி நடத்துகிறேன். இதை அமைச்சர் செல்லூர் ராஜூ  தடுக்கக்கூடாது. கண்டிப்பாக விழா நடத்தவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யுங்கள்’’ என்று உதயகுமார் கூறியுள்ளார். இதனால் மீண்டும், அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பேசியுள்ளனர். ஆனால், அவர்களது  சமாதானத்தை ஏற்க செல்லூர் ராஜூ திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

 இதையடுத்து, அதிகாரிகள் வேறுவழியின்றி மீண்டும் அமைச்சர் உதயகுமாரை தொடர்பு கொண்டனர். ‘‘நிகழ்ச்சி வேண்டாம். வீண் பிரச்னைகள் ஏற்படும்’’ என்று கூறியுள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த அமைச்சர் உதயகுமார்,  ‘‘இதுகுறித்து நான் முதல்வரை நாளை (இன்று) நேரில் சந்தித்து புகார் தெரிவிப்பேன்’’ என கோபமாக கூறி விட்டு, அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார். இதையடுத்து, நலத்திட்ட உதவிகள் பெற பழங்காநத்தம் பகுதிக்கு வந்திருந்த பயனாளிகளிடம்,  ‘இங்கு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டது’ என்று கூறி அவர்களை அதிகாரிகள்  திருப்பி அனுப்பினர். இரு அமைச்சர்களின் இந்த மோதலை சமாளித்து முடிப்பதற்குள், மதுரையில் உள்ள அதிகாரிகள் நேற்று திணறி திண்டாடி விட்டனர்.நடைபயணத்தின் இறுதிநாளான நேற்று மதுரையில், பெருமாள் கோயில், சவுராஷ்டிரா சபை, அண்ணாநகரில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். இதில் கலெக்டர் வினய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Tags : conflict ,Pinnacle ,Madurai , controversy erupted ,welfare , Madurai
× RELATED தங்க கடத்தல் சொப்னாவின் ஆடியோ சர்ச்சை...