400 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்ட கரூர் கொசுவலை நிறுவனத்தில் 3வது நாளாக ஐடி ரெய்டு

கரூர்: 400 கோடிக்கு வரிஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், கரூர் கொசுவலை நிறுவனத்தில் நேற்று 3வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடந்தது. கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ‘ஷோபிகா இம்பெக்ஸ்’ என்ற கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கரூர் வெண்ணைமலையில் கொசுவலை நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. செம்மடை என்ற  இடத்தில் பேக்டரி செயல்படுகிறது. இங்கு தயார் செய்யப்படும் கொசுவலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை, ராம்நகரில் உள்ள உரிமையாளர் வீடு, கோவை சாலை, சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் உள்ள அலுவலகம் ஆகிய 4 இடங்களில் கடந்த 15ம்தேதி மதியம் 30 வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென  சோதனையை தொடங்கினர்.

இரவு 11 மணி வரை சோதனை நடந்தது. இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 2வது நாளாக நேற்றுமுன்தினமும் சோதனை நடந்தது. அப்போது உரிமையாளர் சிவசாமி வீட்டில் துணிகளை அடுக்கி வைக்கும்  அலமாரியில் இருந்து 35 கோடி கைப்பற்றப்பட்டது. மேலும் கணக்குகளை ஆய்வு செய்ததில் 400 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது தெரிந்தது. அந்த வகையில், 4 இடங்களிலும் 3வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்தது. அந்த நிறுவனத்தின் கணக்குகளை  அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: