ஒரிஜினல் எம்சாண்ட் குறித்து விழிப்புணர்வு: முதல்வர் எடப்பாடி பொறியாளர்களுக்கு உத்தரவு

சென்னை: ஒரிஜினல் எம்சாண்ட் குவாரிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு மாற்றாக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணலை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், தமிழகத்தில் போலி எம்சாண்ட் குவாரிகள் ஏராளமானவை இயங்கி வருகிறது. இந்த எம்சாண்ட்டை பயன்படுத்தி வீடு கட்டும் பட்சத்தில் ஒரு சில வருடங்களிலேயே கட்டிடங்கள் உறுதி தன்மை இழந்து இடிந்து விழ வாய்ப்புள்ளது. எனவே, ஒரிஜினல் எம்சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களை கண்டறிந்து அந்த குவாரிகளுக்கு  மதிப்பீட்டு சான்று வழங்க முதல்வர் எடப்படி பழனிசாமி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் சார்பில் தமிழகம் முழுவதும் இயங்கி வந்த 1200 குவாரி உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதன்பேரில் தற்போது 112 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று  வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மதிப்பீட்டு சான்று பெற்ற குவாரிகளை பற்றி பொதுமக்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை.

இதனால், போலி எம்சாண்ட் குவாரிகளை கூட விவரம் தெரியாமல் பொதுமக்கள் சிலர் செயற்கை மணலை வாங்கி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது போன்ற எம்சாண்ட் பயன்படுத்தி கட்டிடம் கட்டினால் உறுதி தன்மை இருக்காது  என்பதால் ஒரு சிலர் எம்சாண்ட் வாங்க அச்சப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி ஒரிஜினல் எம்சாண்ட் எங்கெங்கு கிடைக்கும் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். அந்த கோட்டங்களில் உள்ள எம்சாண்ட் குவாரி பெயர் பட்டியல் விவரங்களை முழுமையாக வெளியிட  வேண்டும். அப்படி செய்தால் பொதுமக்களுக்கு ஒரிஜினல் எம்சாண்ட் எங்கு கிடைக்கும் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப மணல் வாங்கி பயன்படுத்துவார்கள். இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேணடும் என்று அறிவுரை வழங்கியுள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: