சென்னை-அரக்கோணம் இடையே இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்: பயணிகள் கடும் அவதி

சென்னை: மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து புதுவண்ணாரப்பேட்டை, பேசன்பிரிட்ஜ், பெரம்பூர், மீஞ்சூர், கும்மிப்பூண்டி, திருத்தணி வரையும், கடற்கரை முதல் வேளச்சேரி மார்க்கமாகவும், கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை தினம் 120க்கும் மேற்பட்ட  மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், போக்குவரத்து இடையூறின்றி செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைந்து செல்ல முடியும் என்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார்  நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சார ரயில்களை பயன்படுத்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி, ஆவடி, அம்பத்தூர், திருத்தணி, திருப்பதி மார்க்கமாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. இதற்கிடையில் திடீரென்று அம்பத்தூர், ஆவடி ரயில்நிலையங்களுக்கு  இடையே சிக்னல்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து காலை 8.30 மணி முதல் 10.30 மணிவரை அனைத்து ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது.

இதனால் ரயிலுக்காக மக்கள் அதிகம் நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் ரயில்கள் ஏன் வரவில்லை என்று கேட்ட போது அங்கு பணியில் இருந்து ரயில்வே ஊழியர்கள் என்ன காரணம் என்று தெரியவில்லை என்று  அலட்சியாக கூறினர். மேலும் பயணிகள் தொடர்ந்து ஊழியர்களிடம் சென்று ரயில்கள் ஏன் தாமதம் எப்போது வரும் என்று அடிக்கடி கேட்டதையடுத்து அனைத்து ரயில்களும் 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் அனைத்து ரயில்களும் தாமதமாக  வந்தடையும் என்று பலகையில் எழுதி வைத்தனர்.

இதையடுத்து மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டி, திருப்பதி, ஆவடிபோன்ற பகுதிகளில் இருந்து வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்பட்ட  அனைத்து மின்சார ரயில்களும்  1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் தாமதாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் வேறுவழியின்றி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Related Stories: