×

இடஒதுக்கீட்டின் பலன் தடையின்றி கிடைக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: இடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றி கிடைக்கவும்,  சமூகநீதி முழுமையாக நிலை நாட்டப்படவும் அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசு ஊழியர்களின் (பணி நிபந்தனை) சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு எதிராக  நடைபெற்ற வழக்கில், அதிமுக அரசின், “சட்ட அறிவுப் பற்றாக்குறையால்” - இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படும்  ‘பணி மூப்புக் கொள்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. சமூகநீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசின் சட்டத் தோல்விக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது, இந்த அரசின் வாடிக்கை என்பது, இந்த வழக்கிலும் உறுதியாகி விட்டது, வேதனை தருவதாக அமைந்திருக்கிறது. திமுக அரசு இருந்த போது-’100 பாயிண்ட் ரோஸ்டர் முறை’, ‘200’ பாயிண்ட்  ரோஸ்டர் முறையாக உயர்த்தப்பட்டு-69 சதவீத இடஒதுக்கீட்டின் பலன் முழுமையாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

சீனியாரிட்டியில் இருந்த ரோஸ்டர் முறையைப் பாதுகாக்க அதிமுக அரசு முதலில் தவறி-பிறகு அதைப் பாதுகாக்க 14.9.2016ல் பிறப்பித்த சட்டம், உரிய சட்ட நுணுக்கங்களுடன் கொண்டு வரப்படாததால், இன்று உயர் நீதிமன்றம் அந்தச் சட்டத்தில்  உள்ள சில பிரிவுகளை ரத்து செய்திருக்கிறது. இதனால், அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் பதவி உயர்வுகளும், 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய சமூகநீதியின் முழுப் பயனும் பேராபத்திற்கு உள்ளாகியுள்ளன.“போதிய தகவல்கள், தேவையான ஆதாரங்கள் அடிப்படையில் இந்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. மாறாக, அவசர கதியில் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை தமிழக அரசு இனிமேலாவது  எண்ணிப்பார்த்து, மூத்த வழக்கறிஞர்களின் சட்ட ஆலோசனைகளைப் பெற்று- 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பலன், அனைத்து இடஒதுக்கீட்டுப் பயனாளிகளுக்கும் தடையின்றிச் செல்வதற்கும், சமூகநீதி முழுவதும்  நிலைநாட்டப்படுவதற்கும் அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Government of Tamil Nadu ,MK Stalin ,Reservation Tamil Nadu , Reservation, Tamil Nadu, Government ,MK Stalin's request
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...