தொடர் மழை காரணமாக நெல்லையில் பல்லாங்குழியான சாலைகள்: தேங்கி நிற்கும் தண்ணீரில் திக்குமுக்காடும் வாகனங்கள்

நெல்லை: நெல்லையில் நேற்று காலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் மழைநீரில் மிதக்கின்றன. இதனால் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் திக்கு முக்காடி வருகின்றனர். இதனை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கத்தில் இருந்து தற்போது வரை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள குளங்களும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து கடுமையாக மழை பெய்தது. இதனால் மாவட்டம் மற்றும் மாநகரம் பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் செல்ல வழியின்றி ேதங்கி கிடக்கிறது. நெல்லை ராமையன்பட்டி, கரையிருப்பு, சந்திப்பு, மேலப்பாளைம், அழகிரிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் போக வழியின்றி தேங்கி உள்ளது. இதேபோல் மாநகர பகுதியில் உள்ள வடக்கு புறவழிச்சாலை மணிமூர்த்தீஷ்வரம் விலக்கு, சிந்துப்பூந்துறை விலக்கு, தச்சநல்லூர் சந்திமரித்த அம்மன் கோயில் விலக்கு, டவுன் ராமையன்பட்டி சாலை பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாமல் சிரமப்பட்டனர். மழை காரணமாக குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகளால் சாலை ஓரத்தில் செல்ல வாகன ஒட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இதபோல் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலைவரை தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது.

வாகன ஓட்டிகளில் தண்ணீரில் தத்தளித்து செல்கின்றனர். மேலும் அங்குள்ள சாலையில் குண்டு குழி தெரியாமல் பலர் தடுக்கி விழுந்து சென்றதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபோல் தெற்கு புறவழிச்சாலையில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில் குறிச்சி முக்குவரை சாலை பள்ளாங்குழியாக காணப்படுகிறது. இச்சாலையில் கால்வடை மருத்துவமனை, பள்ளிக்கூடம், வழிபாட்டு தலங்கள் உள்ளன. இதனால் அங்கு வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்ல முடியாத வகையில் சாலை படுமோசமாக காணப்படுகிறது. மேலப்பாளையம் பஜார் பகுதியில் இருந்து டவுன் செல்லும் சாலையும், சந்ைத விஎஸ்டி சந்திப்பு பகுதிக்கு வரும் ஹாலோ பிளாக் சாலையிலும் பல இடங்களில் மழைக்கு சேதமடைந்துள்ளது.

பாளை மார்க்கெட்டில் இருந்து சமாதானபுரம் சாலை, மனகாவலம் பிள்ளை நகர், மார்க்கெட் தெற்கு பகுதி சாலை, பாளை பஸ்நிலையம் பகுதியில் பஸ்கள் வெளியேவரும் சாலை, நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் ஏறும் பகுதியில் சாலைகள் படுமோசமாக காணப்படுகிறது. இதுபோல் கீழ் பாலத்தின் இரு பகுதிகளிலும் சாலைகள் ஆண்டுகணக்கில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைகாலத்தில் தண்ணீர் ேதங்குவது வாடிக்கையாக உள்ளது. நெல்லை மாநகர பகுதியில் மழையில் சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Related Stories: