முண்டந்துதுறை அருகே ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: ஐயப்ப பக்தர்கள் தவிப்பு

வி.கே.புரம்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால் முண்டந்துறை-காரையார் ரோட்டில் ராட்சத மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை போட கோயிலுக்கு செல்ல முடியாமல் திணறினர். நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் 5 மணி நேரத்திற்கும் மேலாகவும், நேற்றிரவு முதல் விடிய விடிய விட்டு விட்டு சில மணி நேரங்களும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதில் முண்டந்துறை- காரையார் சாலையில் ராட்சத மரம் இன்று அதிகாலை 3 மணி அளவில் சாலையின் நடுவில் விழுந்தது.

இதனால் தினமும் அதிகாலை 6 மணிக்கு திறக்கப்படும் பாபநாசம் வன சோதனை சாவடி திறக்கப்படவில்லை. இன்று கார்த்திகை மாத பிறப்பு என்பதால் அம்பை, வி.கே.புரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவதற்காக கார், ஆட்டோ, வேன் மற்றும் பஸ்களில் சொரிமுத்தய்யனார் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனர். வனசோதனை சாவடி திறக்காததால் அவர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.அவர்களிடம் வனத்துறையினர், ரோட்டில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் சில நிமிடங்களில் மரம் அகற்றப்பட்டவுடன், சோதனைச் சாவடி திறக்கப்படும் என்று தெரிவித்தனர். பின்னர் ஒரு மணி நேரத்தில் ராட்சத மரம் அகற்றப்பட்டு வாகனங்கள் விடப்பட்டன. இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் சொரிமுத்தய்யனார் கோயிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

Related Stories: