திருப்பதியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தரிசனம்: நீதிபதிக்கு ஏழுமலையான் கோயிலில் இசட் ப்ளஸ் பாதுகாப்பு

திருமலை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்றுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் நேற்று சிறப்பு விமானத்தில் ரேணிகுண்டா வந்தார். அவரை கலெக்டர் நாராயண பரத் குப்தா, எஸ்பி கஜராவ் பூபால் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் தலைமை நீதிபதி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான இணை செயல் அலுவலர் பசந்த்குமார் தீர்த்த பிரசாதங்களை வழங்கினார்.

பின்னர் திருமலைக்கு காரில் வந்த ரஞ்சன் கோகாய்க்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று காலை தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மற்றும் அதிகாரிகள் அவருக்கு வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து பிரசாதம் வழங்கினர்.முன்னதாக தலைமை நீதிபதிக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் இஸ்திக்கப்பால் மரியாதை அளிக்கப்பட்டது.

தரிசனத்திற்கு பின் வெளியே வந்த அவர் கார் மூலம் ரேணிகுண்டா சென்று பின்னர் சிறப்பு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த அயோத்தி வழக்கு, சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது உட்பட பல்வேறு தீர்ப்புகளை சமீபத்தில் வழங்கியவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பதால் அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: