கீழப்பாவூர் தென்பகுதி குளங்கள் நிரம்பாததால் பிசானசாகுபடி கேள்விக்குறி: விவசாயிகள் வேதனை

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் தென் பகுதி குளங்கள் நிரம்பாததால் பிசான சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் கீழப்பாவூர் வட்டார குளங்களான மேலப்பாவூர், கீழப்பாவூர் பெரியகுளம், அருணாப்பேரி, நாகல்குளம் மற்றும் சாலைப்புதூர் கடம்பன்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த குளங்களை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் தற்பொழுது விட்டு விட்டு பெய்து வரும் தொடர் மழை காரணமாக கீழப்பாவூர் வட்டார வடபகுதி குளங்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அதன் மூலம் பாசன வசதி பெறும் கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, மேலப்பாவூர், வெள்ளகால், ராஜபாண்டி, துவரங்காடு, மகிழ், பெத்தநாடார்பட்டி, சாலைப்புதுர், அடைக்கலப்பட்டணம், நாகல்குளம், சிவகாமிபுரம், மேலபட்டமுடையார்புரம், அருணாப்பேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

இப்பகுதியில் நவம்பர் மாதம் இறுதியில் தான் நெல் நாற்று நடும் பணியில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். தென்பகுதி குளங்களான புதுக்குளம், சென்னெல்தா,நாராயணபேரி, கைக்கொண்டார், வெள்ளாளன் புதுக்குளம், பத்மநாதபேரி, ஆவரந்தா, திருப்பணி, பட்டிபத்து ஆகிய 9 குளங்களும் தண்ணீர் பெருகாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் திப்பணம்பட்டி, கல்லூரணி, சிவநாடானூர், நாட்டார்பட்டி, ஆவுடையானூர், அரியப்புரம், சென்நெல்தாபுதுக்குளம், பூவனூர் உட்பட தென்பகுதி விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பல விவசாயிகள் கிணறுகள் மூலம் பல்லாரி, தக்காளி, மிளகாய், வெண்டை, சிறிய வெங்காயம் உட்பட பல பயிர்களை விவசாயிகள் பல இன்னல்களுக்கிடையே விளைவித்து மகசூல் எடுத்தனர். தற்பொழுது கடந்த சில வாரங்களாகவே ஒரு சில மணி நேரம் மிதமான மழை பெய்தது.

தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நிலங்களை பக்குவப்படுத்தி விதை நெல் வாங்கி நாற்று பாவ ஆரம்பித்து விட்டனர். தென்பகுதி குளங்களில் தண்ணீர் இல்லாததால் நெல் நாற்றுகள் கருகுகின்றன. எனவே கீழப்பாவூர் ஒன்றியம் தென்பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் நிரம்பும் வகையில் ராமநதி - ஜம்புநதி கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: