வேலூர் மாவட்டத்தில் 3ம் கட்டமாக 13 டாஸ்மாக் பார்கள் ஏலம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 3ம் கட்டமாக நடந்த டாஸ்மாக் பார் ஏலத்தில் 13 டாஸ்மாக் கடைகளுக்கு பார் ஏலம் விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு இணைந்து 1,872 மதுக்கூடங்கள் என்கிற பார்கள் செயல்படுகிறது. கடந்த ஆண்டு பார் டெண்டர் தொகை அதிகமாக இருந்ததால் ஏலம் எடுக்க பெரும்பாலானோர் முன்வரவில்லை. இதையடுத்து டெண்டர் மதிப்பை குறைத்து ஏலம் விட டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் மாவட்டங்களாக இயங்கி வருகின்றன.

இதில் வேலூர் டாஸ்மாக் மாவட்டத்தில் உள்ள 108 கடைகளில், 3 எலைட் டாஸ்மாக் கடைகளை தவிர்த்து, 105 கடைகளுக்கு, அரக்கோணம் மாவட்டத்தில் 79 கடைகளுக்கு பார்களுக்கு 2 கட்டமாக ஏலம் விடப்பட்டது. இதில் வேலூர் மாவட்டத்தில் 13 கடைகளும், அரக்கோணம் மாவட்டத்தில் 20 கடைகளுக்கான பார் ஏலம் விடப்பட்டது. மீதமுள்ள கடைகளுக்கு பார் ஏலம் 3ம் கட்டமாக நவம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் மேலாளர் மதிச்செல்வன் தலைமையில் பார்களுக்கு ஏலம் நேற்று முன்தினம் விடப்பட்டது. இதில் 6 பார்கள் ஏலம் விடப்பட்டது.

அதேபோல், அரக்கோணம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் மேலாளர் கண்ணப்பன் தலைமையில் நடந்த பார் ஏலத்தில் 7 பார்கள் ஏலம் விடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 3ம் கட்டமாக நடந்து முடிந்த பார் ஏலத்தில் 46 கடைகளுக்கு பார் ஏலம் விடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: