அதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

கோவை: கோவையில் அதிமுக கொடி கம்பம் கீழே விழுந்த போது லாரி விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரி என்ற பெண்ணின் இடது கால் வெட்டி எடுக்கப்பட்டது. அந்த பெண்ணை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தமிழக முதல்வர் கடந்த 11ம் தேதி கோவை வந்த போது அவரை வரவேற்கும் வகையில் விமான நிலையத்தில் இருந்து பீளமேடு வரை அதிமுக கொடிகம்பம் கட்டப்பட்டது. அன்று காலை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் லாரி ஒன்று வந்தபோது ஒரு கொடிகம்பம் திடீரென கீழே சரிந்து விழுந்தது. இதில் நிலை தடுமாறிய லாரி டிரைவர் முருகன்(53) லாரியை திருப்பிய போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகநாதன் என்பவரின் மகள் ராஜேஸ்வரி(24) மீது மோதியது. மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த விஜய் ஆனந்த்(32) என்பவர் மீதும் லாரி மோதி நின்றது.

இந்த விபத்தில் இரண்டு கால்களிலும் லாரி ஏறியதால் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி நீலாம்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதில் ஒருகாலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய முடியாத நிலையில் ராஜேஸ்வரியின் இடது கால் வெட்டி அகற்றப்பட்டது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து திமுக சார்பில் அவரது மருத்துவ செலவிற்காக ரூ.5லட்சம் நிதி வழங்கினார். தொடர்ந்து ராஜேஸ்வரிக்கு செயற்கை கால் பொருத்துவதற்கான செலவினை திமுக ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்தார். வெட்கப்பட வேண்டிய செயல் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: அதிமுக கொடி கம்பம் விழுந்ததில் லாரி விபத்தில் ராஜேஸ்வரி என்ற பெண் சிக்கியது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் மீது மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக கொடி கம்பத்தை கட்டியவர்கள் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கதக்கது. இதுகுறித்து தமிழக முதல்வரை செய்தியாளர்கள் சந்தித்து கேள்வி எழுப்பிய போது, இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த போதும் இதையே அவர் கூறினார். இது வெட்கப்பட வேண்டிய செயல். ஒரு காலை இழந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருந்து அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: