×

கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை

சென்னை: தமிழ்நாட்டில் பெரிய வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படுவதில்லை. இதனால் வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் அதிகம் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து லாரி லாரியாக பெரிய வெங்காயம் வரவழைக்கப்படுகிறது.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்தியா முழுவதும் வெங்காயம் விளைச்சல் வெகுவாக பாதித்தது. இதனால் அப்போதே வெங்காயம் விலை உயர தொடங்கி கிலோ ரூ.80 வரை விற்கப்பட்டது. விலையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டன. ஏற்றுமதிக்கு தடை, பதுக்கல் தடுப்பு நடவடிக்கை, மத்திய சேமிப்பு கிடங்கில் இருந்து வெங்காயத்தை வெளிச்சந்தைக்கு கொண்டு வருதல் போன்ற நடவடிக்கைகளால் விலை ஒரளவு குறைந்தது. 1 கிலோ வெங்காயம் ரூ. 40 வரை இறங்கிறது. இந்த நிலையில் வட மாநிலங்களில் பெய்த பெருமழையின் காரணமாக வெங்காய விளைச்சல் மீண்டும் பாதித்தது. இதனால் வெங்காயம் விலை மீண்டும் உயரத்தொடங்கிவிட்டது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 60 லாரிகளில் வெங்காயம் வருவது வழக்கம். ஆனால் இப்போது 40 லாரிகளில் வெங்காயம் வருகிறது. மொத்த விற்பனையில் 1 கிலோ வெங்காயம் ரூ.50 முதல் 65 வரை கோயம் பேட்டில் விற்கப்படுகிறது. இதை வாங்கி விற்கும் சில்லரை கடைக்காரர்கள் ரூ.80 முதல் 90 வரை விலை நிர்ணயித்து விற்கிறார்கள். சாம்பார் வெங்காயம் என்ற ழைக்கப்படும் சின்ன வெங்காயம் தற்போது அதைவிட விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ.85-க்கும் மற்ற பகுதிகளில் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. தமிழகத்தில் சின்ன வெங்காயம் அறுவடை ஜனவரி மாதம்தான் தொடங்கும். அதன் பிறகு தான் விலை குறையும் என்று வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

Tags : Coimbatore , price , small onions ,Coimbatore market, Rs 100 to Rs 120
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...