துன்பம் தரும் திம்பம் மலைப்பாதை அடிக்கடி நிகழும் விபத்து அல்லல்படும் மக்கள்: நிரந்தர தீர்வு எப்போது?

சத்தியமங்கலம்:  திம்பம் மலைப்பாதை துன்பம் தரும் பாதையாக மாறி வருகிறது. அடிக்கடி விபத்து நடப்பதால் மக்கள் அல்லல்படுகின்றனர். திண்டுக்கல் - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்குகிறது. இச்சாலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்து 3 கி.மீ தூரம் பயணித்தபின் மலை அடிவாரத்தில் இருந்து திம்பம் மலை உச்சி வரை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரமுள்ள திம்பம் மலை உச்சியை சென்றடைய மலை அடிவாரத்திலிருந்து சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் ஆகிறது. இச்சாலை வழியாக 24 மணி நேரமும் இரு மாநில அரசு மற்றும் தனியார் பஸ்களும், சரக்கு லாரிகளும் இயக்கப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்தும் பல்வேறு விதமான சரக்குகள், லாரிகள் மூலம் கர்நாடகா, மகராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதேபோல், வடமாநிலங்களில் இருந்தும் சரக்குகள் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.இம்மலைப்பாதையில் 16.5 டன் பாரம் ஏற்றிய லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் என்பது விதிமுறை. ஆனால், அதிக பாரம் ஏற்றிய லாரிகள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுவதால், மலைப்பாதையின் கொண்டைஊசி வளைவுகளில் திரும்பும்போது பழுது ஏற்பட்டு, நகர முடியாமல் நின்றுவிடுகிறது. பல நேரங்களில் கவிழ்ந்து, விபத்துக்கு உள்ளாகிறது. இது, தொடர்கதையாக உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் - கர்நாடகா மாநிலத்திற்கு இடையே பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்யும் மக்கள், அடர்ந்த வனப்பகுதியில் உணவின்றி தவிக்கும் நிலை தொடர்கிறது.

மேலும், இம்மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கும் பயணிகள், இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட வாகனத்தை விட்டு இறங்கமுடியாமல் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் தலைமையில் வட்டார போக்குவரத்து துறை, தேசிய நெடுஞ்சாலை துறை, வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கபட்டது. அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை கண்டறிய எடை மேடை அமைத்தல், அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை தடுக்க, உயர்தடுப்பு கம்பி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. வனத்துறை சார்பில் திம்பம் மலைப்பாதையில் பயணிக்க நுழைவுக்கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான கட்டண நிர்ணயம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் புதிய விதிமுறை அமலுக்கு வந்தது. அதாவது, தினமும் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இம்மலைப்பாதையில் சரக்கு லாரிகள் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. அதனால், இரவில் செல்லும் லாரிகள் பண்ணாரி மற்றும் ஆசனூர் சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, காலை 6 மணிக்கு திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்கப்பட்டன.

இதன்காரணமாக, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் மலைப்பாதையில் எதிர் எதிரே பயணிக்கும்போது, காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்காரமணாக பஸ் மற்றும் காரில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இப்புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், ஒரு சில மாதங்களில் இந்த நடைமுறை விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் 24 மணி நேரமும் சரக்கு லாரிகள் திம்பம் மலைப்பாதையில் பயணிக்கின்றன. வனத்துறை சார்பில் பண்ணாரி அருகே புதுவடவள்ளி பகுதியில் ஒரு எடை மேடையும், ஆசனூரில் ஒரு எடைமேடையும் அமைக்கப்பட்டு, தற்போது 2 எடைமேடைகளும் பயன்பாடின்றி கிடக்கின்றன. 30 முதல் 50 டன் பாரம் ஏற்றிய லாரிகளும் மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவதால் தொடர் விபத்துகள் நிகழ்கின்றன. சராசரியாக ஒரு மாதத்திற்கு 10 லாரிகள் விபத்தில் சிக்குகின்றன. கடந்த 6 மாதங்களில் மட்டும் இம்மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்துகளில் 2 ஓட்டுனர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே இருமாநில மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: திம்பம் மலைப்பாதை வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சரக்கு லாரிகள் இயக்கப்படுகிறது. இதேபோல், வடமாநிலங்களில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக தமிழகத்திற்கும் சரக்கு லாரிகள் வந்து, செல்கின்றன. இச்சாலையை பயன்படுத்துவற்கு முக்கிய காரணம் கி.மீ தூரம் குறைவதுடன், சுங்கச்சாவடிகள் இல்லை. திம்பம் மலைப்பாதையில் 16.5 டன் எடை வரை பாரம் ஏற்றி செல்லவேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், தற்போது டீசல் விலை உயர்வு, ஓட்டுனர்கள் சம்பளம் என கணக்கிட்டால் கூடுதல் பாரம் ஏற்றச்சென்றால் மட்டுமே லாரி தொழில் நடத்த முடியும். இவ்வாறு பொன்னுசாமி கூறினார்.

சத்தியமங்கலத்தை சேர்ந்த வாகன ஓட்டுனர் தினேஷ் கூறியதாவது: நான், அடிக்கடி இம்மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர், பெங்களூரு, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகிறேன். அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் பழுது மற்றும் விபத்து ஏற்படுகிறது. இதன்காரணமாக மலைப்பாதையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அவசரமாக சிகிச்சைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம்கூட செல்ல முடியாமல் தவிப்பதை நான் பார்த்துள்ளேன். லாரியின் எடையை பரிசோதித்தபின்னர் மலைப்பாதையில் இயக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஓட்டுனர் தினேஷ் கூறினார்.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:திண்டுக்கல் - கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தற்போது கோவையில் இருந்து பெங்களூரு வரை பிரிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் முதல் கோவை சாலை மேம்பாட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோவை கரட்டுமேடு பகுதியில் இருந்து அன்னூர் வரை 6 வழிச்சாலையும், அன்னூர் முதல் சத்தியமங்கலம் வரை நான்கு வழிச்சாலையும், சத்தியமங்கலம் முதல் பண்ணாரி வரை தற்போதுள்ள சாலை மேலும் 10 மீட்டர் அகலப்படுத்தப்படும். இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. நிதி ஒதுக்கிய பின்னர் இப்பணிகள் மேற்கொள்ளப்படும். திம்பம் மலைப்பாதையில் உள்ள குறுகிய வளைவுகள் அகலப்படுத்தப்படும். போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.

Related Stories: