சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் ஆண்டுதோறும் வீணாகும் 120 டிஎம்சி தண்ணீர்: தடுப்பணை கட்டப்படுமா விவசாயிகள் எதிர்பார்ப்பு

சீர்காழி: சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படாததால் ஆண்டுக்கு 120 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கடக்கிறது. எனவே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆறு செல்கிறது இந்த ஆற்றில் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் திருச்சி தஞ்சை அரியலூர் கடலூர் நாகை ஆகிய 5 மாவட்டங்களை கடந்து சுமார் 132 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையார் வழியாக சென்று வங்கக் கடலில் கலந்து வருகிறது இந்த ஆற்றில் வரும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் சுமார் 1லட்சம் ஏக்கரில் நடவு பணிகளை செய்து வந்தனர். ஆனால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய தண்ணீரை மேட்டூருக்கு திறந்து விடாததால் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவது வெகுவாக குறைந்து விட்டது இதனால் கொள்ளிட கரையோரம் உள்ள 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நடவு பணிகளை செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது மேலும் கொள்ளிடம் ஆற்றில் போர்வெல் அமைத்து மின்மோட்டார் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பணியும் நடந்து வந்தது ஆனால் கொள்ளிடம் ஆற்றில் போதிய தண்ணீர் வராததால் போர்வெல் அமைத்த பகுதிகளில் போதிய தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது குறிப்பாக கோடை காலங்களில் ஆற்றில் முற்றிலும் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் செல்வது தடைபட்டு குடிநீர் தட்டுப்பாடு எழுந்துள்ளது. விவசாயிகள் நடவு பணிகளை தொடர்ந்து செய்திடவும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கவும் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டுமென பொதுமக்கள் விவசாயிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தேர்தல் நேரத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து கண்டு கொள்வதும் இல்லை. அது குறித்து பேசுவதும் இல்லை இனியும் அரசியல்வாதிகளையும் ஆட்சியாளர்களையும் நம்பி பயனில்லை என்று எண்ணிய பொதுமக்கள் விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கண்டுகொள்ளாமல் பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர்.

கடந்த 2005ம் ஆண்டு கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் 4.5 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விட்டதால் கடலில் வீணாக கலந்தது. தண்ணீர் அதிகமாக வந்ததால் கொள்ளும் இடம் கொள்ளிடம் கொள்ளாமல் சீர்காழியை அடுத்த அளக்குடி என்ற இடத்தில் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் முழ்கின. 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைத்து உணவுகள் வழங்கப்பட்டன. வயல்களில் தண்ணீர் புகுந்ததால் 40 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் முழ்கி அழுகின. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். 2005ல் அளக்குடியில் கொள்ளிட கரை உடைந்த இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கரையை பலப்படுத்தப்படும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் முழுமையாக கரையை பலப்படுத்த வில்லை. 2005ம் ஆண்டு வந்தது போல் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வந்தால் மீண்டும் அளக்குடியில் மீண்டும் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடந்த மாதம் பெய்த மழையின் போது கல்லணையிலிருந்து 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது குறிப்பிடத்தக்கது.

காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இமயவரம்பன் கூறுகையில் நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஆற்றில் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். தண்ணீர் வௌ;ளம் புரண்டு வரும் எவ்வளவு தண்ணீரை வந்தாலும் கொள்ளுமிடம் என்பதால் கொள்ளிடம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் காலப்போக்கில் கர்நாடகா அரசு அதிக அளவில் அணைகளை கட்டி தண்ணீரைத் தேக்கியதால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டதால் மேட்டூரில் இருந்து கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் உபரி நீரை போதிய அளவு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாய பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடும் எழுந்துள்ளது. ஆட்சியாளர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் வழியாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க அணை கட்டி இருக்க வேண்டும். கொள்ளிடம் ஆறு வறண்டதால் அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பொதுமக்கள் விவசாயிகளின் நலன் கருதி கொள்ளிடம் ஆற்றில் உடனடியாக தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கொள்ளிடம் தடுப்பணை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஜெக சண்முகம் கூறுகையில், நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர், ஆனால் எந்த நடவடிக்கையும் ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக கொள்ளிடம் ஆற்றின் வழியாக சுமார் 120 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இந்த தண்ணீரை சேமித்தால் ஒரு ஆண்டு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு எழ வாய்ப்பில்லை, நடவு பணிகளையும் விவசாயிகள் சிறப்பாக செய்ய வாய்ப்பு ஏற்படும் தமிழக அரசு மழை நீரை சேமிக்க வேண்டும் என விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றனர், ஆனால் கொள்ளிடம் ஆற்றில் வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்டுவது குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை ஏன் என்று தெரியவில்லை, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி னால் மணல் எடுப்பது தடைபடும், இதனால் கோடிகளை குவிக்க முடியாது என்பதால் ஆட்சியாளர்கள் தடுப்பணை கட்ட முன்வர வில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. பொதுமக்களின் தொடர் போராட்டங்களை தொடர்ந்து கொள்ளிடம் சந்தை படுகை என்ற இடத்தில் பொது பணித் துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்தி சென்றனர், ஆனால் தடுப்பணை கட்டுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை விரைவில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக அறிவிப்பு வெளிவந்தால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார்.

Related Stories: