அதிபர் தேர்தலில் வெற்றி: இலங்கையின் 7-வது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: இலங்கையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தலில் இவ்வளவு பேர் போட்டியிட்டது இதுவே முதல் முறை.   ஆனால், தற்போது பதவியில் உள்ள இலங்கை அதிபரோ, பிரதமரோ அல்லது எதிர்கட்சி தலைவரோ யாரும்  இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே(70), அந்த    நாட்டின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன்  நிறைவடைந்த நிலையில்,  81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை வகித்தார். பின்னர், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மீண்டும்   தொடர்ச்சியாக கோத்தபய ராஜபக்ச முன்னிலை வகித்தார். அதன்படி, இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய கட்சி 50.55 சதவீதம் ( 56 லட்சத்து 95 ஆயிரத்து 45 ) ஓட்டுகளும், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான சஜித்  பிரேமதாச 43.49 சதவீதம் ( 46 லட்சத்து 82 ஆயிரத்து 726 ) ஓட்டுகளும் பெற்றுள்ளனர். இதன்படி, கோத்தபயா ராஜபக்சே இலங்கையின் 7-வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார். தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை அறிவிக்கப்படும்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை சஜித் பிரேமதாச ஒப்புக்கொண்டார். மேலும், இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவைப் பாராட்டுகிறேன்; வாழ்த்துக்கள் மக்களின் தீர்ப்பை   ஏற்றுக்கொள்கிறேன் என்றார். தொடர்ந்து, இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதிவியையும் சஜித் பிரேமதாச ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், இரு நாடுகளுக்கும் குடிமக்களுக்கும்  இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.  மேலும், அதிபர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக இலங்கை மக்களையும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: