×

வீரம், தியாகம், ஆன்மீகத்தின் அடையாளம் சரித்திரம் பேசும் சங்ககிரி கோட்டை: புராதனங்கள் சிதையும் அவலம்

சேலம்: சுற்றிலும் மலைகள் சூழ்ந்த மாவட்டமான சேலம், புராதனங்கள் பொதிந்து கிடக்கும் பொக்கிஷமாகவும் திகழ்கிறது. இங்குள்ள ஆத்தூர், சங்ககிரி மலைக்கோட்டைகள் வரலாற்றின் முக்கிய அடையாளமாக நிற்கிறது. ஆனால் பராமரிப்பு இல்லாமல் இவை பாழாகி வருவது பார்க்கும் விழிகளை வேதனையில் ஆழ்த்துகிறது. இதில் சங்ககிரி துர்க்கம் என்று போற்றப்படும் சங்கு வடிவிலான சங்ககிரி மலையில் பிரம்மாண்டத்தின் பிம்பமாக திகழும் மலைக்கோட்டையானது ஆன்மீகம், வீரம், தியாகம், மதநல்லிணக்கம், அற்புத கலைநயம் என்று எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே தாங்கி, வியப்பின் உச்சமாக காட்சியளிக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோட்டை விஜயநகர அரசர்களால் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் திப்பு சுல்தானால் பலப்படுத்தப்பட்டது. தமிழகத்தின் மிக உயரமான மலைக்கோட்டை என்ற சிறப்பும் இதற்கு உண்டு. மலைஅடிவாரப் பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் 9வாயில்கள் உள்ளது. முதல் வாயிலில் நுழையும் போது, அற்புத சிற்பங்கள் செதுக்கப்பட்ட வசந்த மண்டபம் வரவேற்கிறது. இதன் ஒரு பகுதியில் இருக்கும் நீர்சேமிப்பு குளம், கவனம் ஈர்க்கிறது. இரண்டாவது வாயிலில் சிவன் கோயிலும், மூன்றாவது வாயிலில் வரதராசப் பெருமாள் கோயிலும் நம்மை பக்தி பரவசத்துடன் வணங்க வைக்கிறது.  

நான்காவது வாயிலில் மண்டபமும்,  5வது வாயிலை  அடுத்து படைவீரர்கள் தங்குமிடமும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. 5மற்றும் 6ம் வாயில்களுக்கு இடையில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம் உள்ளது. 6வது வாயிலுக்கு அருகில் வெடிமருந்து வைப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. 7மற்றும் 8வது வாயில்களை கடந்து சென்றால் 9வது வாயிலில் 1799 என்ற ஆண்டு குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த ஆண்டை வைத்து கணக்கிடும் போது, இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்பது உறுதியாகிறது. மலைஉச்சியில் சென்னகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. மலை உச்சியின் ஒரு புறத்தில், மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடம், தியாகத்தின் சுவடுகளை தாங்கி நிற்கிறது.
அரிய சிற்பங்கள், பிரம்மாண்ட தூண்கள், கவனம் ஈர்க்கும் சுரங்கங்கள், நீர்சேமிப்பை வலியுறுத்தும் பாலிகள், ஆங்காங்கே அருவியாய் பெருக்கெடுத்து ஓடும் நீரோடைகள், அரிய மூலிகைகள் பொதிந்து கிடக்கும் இந்த கோட்டை, காலத்தின் சுழற்சியால் மெல்ல, மெல்ல சிதைந்து வருகிறது. வாரத்தின் சில நாட்களில் சாமிதரிசனத்திற்கு பக்தர்கள் வருகின்றனர். தீரன் சின்னமலை நினைவுநாளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடக்கிறது. இதை தவிர்த்து பார்த்தால் மனிதர்களின் பாதச்சுவடுகள் பாடாத இடமாகவே சங்ககிரி ேகாட்டை உள்ளது. இதனால் புதர்மண்டிக் காடாக காட்சியளிக்கிறது. மண்ணின் பெருமை பேசும், இது போன்ற பொக்கிஷங்கள், காலச்சக்கரத்தில் சுழற்றி சிதைத்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் ேவண்டுகோளாக உள்ளது.


அந்தக்காலத்திலேயே நீர் சேகரித்த பெருமை

மலை உச்சியில் பாதி இடம் வெறும் பாறை தான். தோராயமாக ஒரு ஐந்து ஏக்கர் பரப்பளவு மேலே இருக்கிறது. கடைசி நிழல் மண்டபத்தை விட்டு வெளியே வந்தவுடன் முதலில் ஒரு பெரிய பாறையும் அதன் மேல் ஒரு சிறிய அனுமார் கோவிலும் இருக்கிறது. இதை தாண்டிதான் அடுத்து செல்ல முடியும். இந்த பாறையை ஒட்டி கீழே ஒரு தண்ணீர் பாலி இருக்கிறது. அந்த பாறையின் சரிவில், கீழே ஒரு சுவர் எழுப்பி, அங்கு தேங்கும் மழை நீரை சேகரித்து வைத்து வந்துள்ளனர். இதனால் அந்தக் காலத்திலேயே மழைநீரை சேகரித்து பயன்படுத்திய பெருமை இந்த கோட்டைக்கானது என்றால் அது மிகையல்ல. தற்போது மலை உச்சியில் தண்ணீர் கிடைக்க வேறு வழி இல்லை. ஆனாலும் அங்கு துள்ளித்திரியும் குரங்குகளின் தாகத்தை இந்த பாலி தீர்த்து வைக்கிறது.

சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை ேதவை

வடமாநிலங்களில் இது ேபான்ற கோட்டைகளுக்கு போதிய நிதி ஒதுக்கி, பராமரித்து அரசு பாதுகாத்து வருகிறது. ஆனால் பல்வேறு வரலாற்று சிறப்புகள் கொண்ட இந்த கோட்டையை அரசும், தொல்லியல் துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. இதனால் அது விஷமிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே அரசு இதனை பாதுகாத்து, பராமரித்து சுற்றுலாத் தலமாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும். இதன் மூலம் இது மக்களின் கவனத்ைத ஈர்ப்பதோடு வீரம், தியாகம், மதநல்லிணக்கம், சமூக பொறுப்பு போன்றவற்றை மனதில் பதிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.

Tags : Sankagiri Fort , Heroic, Sacrifice, Identity, Sankagiri Fort, Antiquities
× RELATED 2024 முதல் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க...