×

ஒரு கை இல்லாவிட்டாலும் நம்பிக்...‘கை’ இழக்காத மண்பாண்ட தொழிலாளி: ஆதரவுக்கரம் நீட்டுமா அரசு?

வாடிப்பட்டி: சமயநல்லூர் அருகே ஒரு கை இல்லாத நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் மண்பாண்டங்கள் தயாரித்து வரும் தொழிலாளி, அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம்,  சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சி பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். மண்பாண்ட தொழிலாளி. இவரது மகன் வேல்முருகன்(35). கடந்த 2011ம் ஆண்டு தனியார் ஆலையில் பணி புரிந்தபோது, இயந்திரத்தில் சிக்கி வலது கை மணிக்கட்டுடன் துண்டானது. இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளான வேல்முருகன் தனது ஒரு கை இழந்தாலும் நம்பிக்கை இழக்காமல், தனது குலத்தொழிலான மண்பாண்டம் செய்வதில் நாட்டத்தை செலுத்தினார். முதலில் சிரமப்பட்டாலும் குடும்பத்தார், நண்பர்கள் கொடுத்த ஊக்குவிப்பால, தற்போது களிமண் உண்டியல், குவளை, ஜாடி உள்ளிட்ட பொருட்களும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனையாகி வருகிறது. மேலும் இவர் தனது தொழில் திறமையை தன்னோடு நிறுத்தி விடாமல் தனக்கு தெரிந்தவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து வேல்முருகன் கூறும்போது, ‘‘எனக்கு ஆலையில் நடந்த விபத்தில் வலது கை மணிக்கட்டுடன் துண்டானது. அன்று முதல் தமிழக அரசு மூலம் ஏதேனும் உதவி கிடைக்காதா என பல முயற்சிகள் எடுத்து வருகிறேன் ஆனால் எவ்வித பலனுமில்லை. எங்கள் தொகுதி எம்எல்ஏவான  அமைச்சர் செல்லூர் ராஜூவையும் பலமுறை நேரில் சந்தித்து மண்பாண்டம் தயாரிக்க உரிய இயந்திரங்களை அரசு மூலம் பெற்றுத்தர கோரிக்கை விடுத்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும் மாற்றுத்திறனாளிகள் தனித்திறனுக்கான கவின்கேர் விருதுக்கும் முதல் நபராக தேர்வான நிலையில் அவ்விருதும் எனக்கு மறுக்கப்பட்டுள்ளது’’ என்றார். எனவே தமிழக அரசு இனியாவது வறுமையில் வாடும் தன்னம்பிக்கை மண்பாண்ட கலைஞரான வேல்முருகன் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Tags : pottery worker ,Government , Pottery worker, support, government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...