17 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையில் இருந்து தினமும் அச்சன்கோவிலுக்கு பஸ்கள் இயக்கம்

செங்கோட்டை: கேரள மாநிலம், அச்சன்கோவிலில் பிரசித்திபெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு வழிபாடு மேற்கொள்ள தமிழகத்தில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவிலுக்கு தினமும் 3 முறை இயக்கப்பட்டு வந்த தமிழக அரசு பஸ்கள், 17 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி இருமாநில பயணிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

இருப்பினும் அச்சன்கோவிலுக்கு கேரள அரசு சார்பில் செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 8 மணி, மாலை 3.30 மணி, மாலை 5.30 மணி ஆகிய நேரங்களில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அச்சன்கோவிலுக்கு தமிழக அரசு, மீண்டும் பஸ்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து செங்கோட்டை போக்குவரத்து கழக பணிமனை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவிலுக்கு நேற்று பஸ் இயக்கப்பட்டது.

இந்த பஸ் தினமும் செங்கோட்டையில் இருந்து காலை 6.40, பிற்பகல் 2.20 ஆகிய இரு வேளைகளில் இயக்கப்படுகிறது. 29 கிமீ தொலைவிலான இந்த பயணத்திற்கு ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பஸ், தினமும் காலை 8.10 மணிக்கு அச்சன்கோவிலில் இருந்து  புறப்பட்டு செங்கோட்டைக்கு வந்துசேரும். பின்னர் காலை 9.20 மணிக்கு செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு  சென்று அங்கிருந்து புறப்பட்டு செங்கோட்டையில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு அச்சன்கோவில் செல்லும்.அச்சன்கோவிலில் இருந்து  மாலை 3.45 மணிக்கு புறப்படும். பின்னர் செங்கோட்டையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மீண்டும் நெல்லை சென்று வரும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதை ஐயப்ப பக்தர்களும், இரு மாநில பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.

Related Stories: