×

குந்துகால் துறைமுக பணிக்காக கடலில் 100 டன் மணல் அள்ள திட்டம்: ராமேஸ்வரம் நகர் பகுதி, கோயிலுக்கு ஆபத்து

ராமேஸ்வரம்: பாம்பன் குந்துகால் மீன்பிடி துறைமுக பணிக்காக ராமேஸ்வரம் கடலில் பல நூறு டன் அளவிற்கு மணல் அள்ள திட்டமிட்டுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு, ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடலோர அரிப்பு ஏற்பட்டு ராமேஸ்வரம் நகருக்கும் ஆபத்து ஏற்படுமென பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில், பல கோடி ரூபாய் செலவில் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி துவங்கப்பட்ட நிலையில் கட்டுமான பணிக்கு தரமற்ற சவடு மணல் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. முன்னாள் அமைச்சர் ஒருவர் ஒத்துழைப்புடன், கடற்கரையோரம் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்திலிருந்து சவடு மணல் எடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. கடலில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு தரம் வாய்ந்த மணல் மற்றும் சிமென்ட் கலவை பயன்படுத்த வேண்டும். துறைமுகம் கட்ட டெண்டர் எடுத்தவர்கள் வெளியில் இருந்து ஆற்று மணலை கொண்டு வருவதற்கு பதிலாக, கடலோரத்தில் உப்புத்தன்மையுள்ள மணலை கட்டுமானத்திற்கு பயன்படுத்திய நிலையில், தற்போது துறைமுக ஜெட்டி பாலத்திற்கு பில்லிங் செய்வதற்கு ராமேஸ்வரம் கடற்கரையில் மணல் அள்ள திட்டமிட்டுள்ளனர். குந்துகால் கடலில் படகுகள் நிறுத்துவதற்கு கட்டப்பட்டுள்ள துறைமுக ஜெட்டி பாலத்திற்கும், கடற்கரைக்கும் இடையிலுள்ள கடல் பகுதியை மணல் போட்டு சமதளமான நிலப்பகுதியாக மாற்றினால்தான் ஜெட்டிபாலத்தின் அருகில் வாகனங்கள் செல்ல முடியும். இதனால் கடற்கரையிலிருந்து ஜெட்டிபாலம் வரையில் கடலில் மணல் கொட்டி மேவுவதற்கு தேவையான மணலை ராமேஸ்வரம் துறைமுக கடல் பகுதியில் இருந்து தோண்டி எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தின் வடக்கு பகுதியில் ஆழமற்று காட்சியளிக்கும் கடல் பகுதியில் மண் தோண்டும் கப்பல் மூலம் அகழ்வு செய்து, பல நூறு டன் அளவில் தோண்டியெடுக்கப்படும் மணலை கரையில் கொட்டி வாகனங்களில் குந்துகால் கடற்கரைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கடலில் மணலை அகழ்ந்தெடுக்கும் மண் தோண்டி கப்பல், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக ஜெட்டியில் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. அகழ்வு செய்த மணலை கரைக்கு கொண்டு வருவதற்கு தேவையான குழாய்கள் ராமேஸ்வரம் கடற்கரையில் போடப்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தின் வடக்கு கடற்கரை பகுதியையொட்டி ராமநாதசுவாமி கோயில் மற்றும் கட்டிடங்கள் இருப்பதால் இப்பகுதியில் கடலரிப்பு ஏற்படாமல் இருக்க பாறைக்கற்களும் போடப்பட்டுள்ளது. இயற்கையாக சமதளத்துடன் அமைந்துள்ள வடக்கு கடற்கரை பகுதியில் கடலில் மணல் அள்ளினால் பெரிய அளவில் பள்ளம் ஏற்படுவதுடன், கடலரிப்பும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இப்பகுதியில் கடலில் அகழ்வு செய்தால் ராமேஸ்வரம் நகருக்கும் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கடல் நடுவில் பெரிய பள்ளம் ஏற்படுவதால் மீனவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதுடன் புயல் காற்று காலத்தில் இலகுவாக நகருக்குள் கடல் நீர் புகுந்துவிடும். துறைமுகம் பணியின்போது நிரவப்படும் மணலை தீவிற்கு வெளியில் இருந்து கொண்டு வரவேண்டும். ஆனால் செலவில்லாமல் கட்டுமான பணிக்கு குந்துகால் கடற்கரை பகுதியில் மணல் எடுத்தது போல், தற்போது ஜெட்டி துறைமுகம் அமைக்கும் பணிக்கும் செலவில்லாமல் கடலில் தோண்டியெடுக்கும் சட்டத்திற்கு புறம்பான செயலை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர். மணல் அகழ்வு செய்வதற்கு தேவையான கப்பல் மற்றும் இயந்திரத் தளவாடங்கள் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ள நிலையில், இதற்கு ராமேஸ்வரம் துறைமுகத்துறை, மீன்துறை மற்றும் நகராட்சித்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும், ஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவும் இருப்பதால்தான் இச்செயலில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மிகவும் தைரியமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராமேஸ்வரம் கோயில் மற்றும் நகருக்கு ஆபத்தையும், கடலோர அரிப்பையும் உருவாக்கும் வகையில் கடலில் மணல் அள்ளுவதை உடனடியாக தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : sea ,area ,Rameswaram Nagar , Gundakal Port Work, Sand, Rameswaram
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...