டெல்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் குழாய் நீர் பாதுகாப்பானது அல்ல: மத்திய அரசின் ஆய்வின் தகவல்

டெல்லி: 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் பாதியளவிற்கு இன்னமும் கூட குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாமலே  உள்ளது, வறுமையை ஒழிக்கும் முயற்சிக்கு இது ஒரு தடையாகவே இருந்து வருகிறது. தண்ணீரை எடுப்பதிலேயே மக்களின் பாதி நாள் விரயமாகிறது. எனவே அரசு இந்த பிரச்சனையை சரிசெய்து அனைவருக்கும் தண்ணீர் தருவதை உறுதி  செய்ய முடிவெடுத்துள்ளது. இத்திட்டமானது அரசின் அளவில் மட்டுமே இருந்துவிடாமல், தூய்மை இந்தியா திட்டம் போன்று மக்களின் இயக்கமாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவரப்படும் ஜல் ஜீவன் திட்டமானது உள்ளூர் அளவில் மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டுதல், கழிவு நீர் சுத்திகரிப்பு மூலம் விவசாய தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்டவற்றையும்  கவனத்தில் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன், மாநில அரசுகளும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்ளும் என பிரதமர் கூறினார்.

ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் வழங்க, மத்திய அரசு ஜல்ஜீவன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் கிடைக்கும் குழாய் நீரை எடுத்து பரிசோதனை  செய்யப்பட்டது. இதன் 2 ஆம் கட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.  பரிசோதனை செய்யப்பட்ட 20 தலைநகரங்களின் நீரில், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் வழங்கப்படும் குழாய்  நீர், எந்த சுத்திகரிப்பும் செய்ய அவசியமின்றி, தூய்மையான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இங்கு 10 இடங்களில் பெறப்பட்ட நீரின் மாதிரிகளில், 11 சோதனை முடிவுகளும், நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாடு அளவீடுகளுக்கு உட்பட்டு, பாதுகாப்பானதாக இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கு நேர்மாறாக, நாட்டின் தலைநகரான டெல்லி,  தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் குழாய் குடிநீர், நிர்ணயிக்கப்பட்ட 11 வகையான சோதனைகளில் பலவற்றில் தேர்ச்சி பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.குறிப்பாக, சென்னையில்  10 இடங்களில் எடுக்கப்பட்ட குழாய் நீரின் மாதிரிகளில், 11-ல் 9 சோதனை முடிவுகள், தரக்கட்டுப்பாடு அளவீடுகளை தாண்டி, குடிப்பதற்கு தரமின்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோல் டெல்லி குழாய் குடிநீரும் பாதுகாப்பானதாக இல்லை என்றும் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.நீரின் மணம், குளோரைடு, புளுரைடு, அமோனியா போன்று ரசாயனங்களின் அளவுகள் குறித்த பரிசோதனைகளில், 13  மாநில தலைநகரங்களின் நீர் தரமின்றி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஆய்வறிக்கை முடிவுகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறிய ராம்விலாஸ் பாஸ்வான், நீரின் தரத்தை மேம்படுத்த  மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தார்.

Related Stories: