ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்காலிக கலெக்டர் அலுவலகம் கட்ட ரூ4.32 கோடி நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரை தனி மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, புதிதாக அமைய உள்ள கலெக்டர், எஸ்பி அலுவலகங்களுக்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்தது. இதற்கிடையில், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூருக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களாக நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக விஜயகுமாரும், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக மயில்வாகனனும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தற்காலிகமாக ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இயங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் இருந்த உபகரணங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், தற்காலிக கலெக்டர் அலுவலக கட்டிடங்கள் கட்ட ரூ4.32 கோடி நிதி கேட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு  அறிக்கை அனுப்பி உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தற்காலிகமாக கலெக்டர் அலுவலகம் அமைய உள்ளது. இதில் பிபிஜிஐ கட்டிடத்தில் கலெக்டர் அலுவலக அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, கூட்ட அறை, வீடியோ கான்பரன்சிங் அறை அமைய உள்ளது.

மாணவிகள் விடுதியில் மாவட்ட நிர்வாக தலைமை அதிகாரிகளுக்கும், மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கும், பிங்க், கிரீன் வகுப்பறைகளில் கூட்டறை மற்றும் அலுவலக கட்டிடங்கள் அமைய உள்ளது. கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை மற்றும் கூட்ட அறை, நிக் அலுவலகங்களுக்கு 780.52 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிடங்கள் கட்ட ரூ96 லட்சமும், மாணவிகள் விடுதியில் 1029 சதுர மீட்டரில் நிர்வாக தலைமை அதிகாரிகளுக்கான கட்டிடங்கள் கட்ட ரூ61 லட்சமும், மாணவர்கள் விடுதியில் 780.50 சதுர மீட்டரில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அலுவலகங்கள் கட்ட ரூ54 லட்சமும், 277.49 சதுர மீட்டரில் குறைதீர்வு கூட்ட அலுவலகம், பொதுமக்களுக்கு கழிவறை கட்டிடங்கள் கட்ட ரூ50 லட்சமும், அலுவலகத்தை சுற்றி சுற்றுச்சுவர், சாலை மற்றும் நடைபாதை அமைக்க ரூ36 லட்சமும், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க ரூ38 லட்சமும், பிங்க், கிரீன் வகுப்பறைகளில் ரூ23.5 லட்சத்தில் கூட்ட அறை, அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. மேலும் புதிய கலெக்டர் அலுவலகத்தில் பர்னீச்சர் வாங்க ₹74 லட்சம் என மொத்தம் ரூ4 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் நிதி கிடைத்ததும், தற்காலிக கலெக்டர் அலுவலகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதோடு, புதிய கலெக்டர், எஸ்பி அலுலவகங்கள அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

தற்காலிக எஸ்பி அலுவலகத்திற்கு இடம் தேர்வு

ராணிப்பேட்டை மாவட்ட புதிய தற்காலிக எஸ்பி அலுவலகத்துக்கான இடத்தினை தேர்வு செய்யும் பணியில் ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா தலைமையில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு முன்னிலையில் ராணிப்பேட்டை நகராட்சி பழைய நகர மன்ற கூட அலுவலகம் மற்றும் காரை கூட்ரோடு இளைஞர் சீர்திருத்த பள்ளி மற்றும் வாலாஜாவில் உள்ள ராணிப்பேட்டை இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய இடங்களில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: