நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை: வைகை வெள்ளம் புகுந்து வாழை, கத்தரி நாசம்

வருசநாடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய, விடிய கொட்டிய கனமழையால் மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கத்தரி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. தேனி மாவட்டம், கடமலை - மயிலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அரசரடி, வெள்ளிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழை நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. இதனால் மூலவைகையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருகரைகளையும் தொட்டு கரை புரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம், கரையோரத்தில் உள்ள வயல்களில் புகுந்தது. வெள்ளநீர் புகுந்ததில் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கத்தரி, தட்டைப்பயறு மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.

வெள்ளப்பெருக்கால் தும்மக்குண்டு, வருசநாடு, முருக்கோடை, சிங்கராஜபுரம், தங்கம்மாள்புரம் போன்ற பகுதிகளில், குடிநீர் விநியோகத்திற்காக ஆற்றில் தோண்டப்பட்டுள்ள உறைகிணறுகள் நீரில் மூழ்கின. ஏராளமான உறை கிணறுகள் சேதமடைந்தன.

உறைகிணறுகளில் இருந்து குடிநீரை பம்ப் செய்ய பயன்படும் மின்மோட்டார்களை இயக்குவதற்காக பதிக்கப்பட்டிருந்த மின்கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேகமலை விஏஓ அன்பழகன், மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் சரவணன், கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐக்கள் ராமபாண்டியன், கடமலைக்குண்டு எஸ்ஐ அருண்பாண்டி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கரையோரத்தில் வசிக்கும் பாதுகாப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மயிலாடும்பாறை விவசாயி ஈஸ்வரன் (57) கூறுகையில், ‘‘கனமழை காரணமாக கத்தரி, தென்னை, தட்டைப்பயிறு உள்ளிட்ட விவசாய பயிர்கள் மிகவும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. உறைகிணற்றையும் முழுமையாக மணல் போட்டு மூடிவிட்டது. கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சேதங்களை ஆய்வு செய்ய வேண்டும். கடன் வாங்கி 5 ஏக்கரில் விவசாயம் செய்தேன். வெள்ளத்தால் பலத்த நஷ்டமடைந்துள்ளேன். அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

வெள்ளத்துடன் வந்த மலைப்பாம்பு

மயிலாடும்பாறை - தேனி சாலையில் வெள்ளநீர் தேங்கியதால், அப்பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததையடுத்து சாலையில் புகுந்த மழைநீர் வடிந்தது. இதன்பின்னர் போக்குவரத்து சீரானது. வருசநாடு 3ம் வார்டு குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீருடன் மலைப்பாம்பு புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வெளியேற்றினர்.

Related Stories: