வத்தலக்குண்டுவில் பிளாஸ்டிக் முட்டை விற்பனையா?...ஆம்லெட் போட்டபோது அதிர்ச்சி

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் ஆம்லெட் போட்டபோது முட்டையின் வெள்ளைக்கரு பிளாஸ்டிக் போன்று இருந்தது. இதனால் பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுகிறதா என பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, அருணாசலபுரத்தை சேர்ந்தவர் காசிமாயன். நிலக்கடலை வியாபாரி. இவர் அருகிலுள்ள கடையில் முட்டைகள் வாங்கியுள்ளார். நேற்று காலை அவரது மனைவி ஆம்லெட் போட்டபோது வெள்ளைக்கரு பிளாஸ்டிக் போல் காணப்பட்டது. தொடர்ந்து மற்றொரு முட்டையும் அதேபோல் இருந்தது.

அதிர்ச்சியடைந்த காசிமாயன், கடைக்காரரிடம் காண்பித்துள்ளார். அதற்கு அவர், ‘இதை  முட்டை மொத்த கடைக்கு கொண்டு சென்று என்னவென்று கேட்டு வருகிறேன்’ என தெரிவித்தார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் பல இடங்களில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்கப்படுவதாக தகவல் பரவியது. தற்போது வத்தலக்குண்டு பகுதியிலும், பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளதா என பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: