வத்திராயிருப்பு அருகே கனமழையால் பிளவக்கல்-பெரியாறு அணையில் கூடுதலாக திறந்த நீர் வயல்களில் புகுந்து பயிர்கள் நாசம்: சாலை அரிப்பால் போக்குவரத்து துண்டிப்பு

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் என்ற இடத்தில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 47.64 அடி உயரமுள்ள பிளவக்கல் பெரியாறு அணையின் தற்போதைய நீர்மட்டம் 45 அடி. 44.62 அடி உயரமுள்ள கோவிலாறு அணையின் தற்போதைய நீர்மட்டம் 30 அடி.  பெரியாறு அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிடாததால், கடந்த சில தினங்களுக்கு முன் அணையிலிருந்து வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் இரவு 11 மணி அளவில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்வரத்து, 3,500 கனஅடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, கூடுதலாக 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் அங்கிருந்து வரும் கால்வாய் வழியாக விராகசமுத்திரம் கண்மாய்க்கு சென்று கொண்டிருந்தது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென அணையின் நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டதால், கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. கூமாப்பட்டியிலிருந்து பிளவக்கல் செல்லும் சாலையில் கோவிந்தன்மேடு என்ற இடத்தில், கால்வாய் தரைப்பாலத்தில் தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் புகுந்து அரிப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்து நெல் வயலுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலை அரிப்பால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து காலை 5.30 மணியளவில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது உடனடியாக நிறுத்தப்பட்டது. சாலை அரிப்பால் பட்டுப்பூச்சி நகர், கிழவன்கோவில், பிளவக்கல் பெரியாறு அணை பகுதியில் வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். நேற்று காலை தாசில்தார் ராஜா உசேன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சாலை துண்டிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு அரிப்பை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் காலை 11.30 மணியளவில் அணையின் நீர்வரத்து 150 கன அடியாக குறைந்தது. இந்த தண்ணீரை அப்படியே வெளியேற்றுகின்றனர். அணைப் பாதுகாப்பு பணியில் உதவிப்பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடு இடிந்து முதியவர் பலி

வத்திராயிருப்பு அருகே, சேதுநாராயணபுரத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (65). வயது முதிர்வு காரணமாக கடந்த 2 ஆண்டாக கண் பார்வையை இழந்து பரிதவித்து வந்தார். திருமணமாகாத இவர், மண் சுவரிலான கூரை வீட்டில் வசித்து வந்தார். இவரை சகோதரர் இருளப்பன் கவனித்து வந்தார். கடந்த சில நாட்களாக வத்திராயிருப்பு பகுதியில் பெய்த மழைக்கு முத்துச்சாமியின் வீட்டுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் காலை திடீரென சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கி கொண்டிருந்த முத்துச்சாமி இடிபாடுகளில் சிக்கி கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலையில் பரிதாபமாக முத்துச்சாமி இறந்தார். இடிந்த வீட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Related Stories: