போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் ஸ்டிரைக் தெலங்கானாவில் 144 தடை உத்தரவு

திருமலை: போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் ஸ்டிரைக் காரணமாக தெலங்கானாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.தெலங்கானா மாநில போக்குவரத்து கழக தொழிலாளர்கள், போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 43 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தற்காலிக டிரைவர் மற்றும் நடத்துனர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்துக் கழக கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அஸ்வத்தாமா நேற்று போக்குவரத்து கழக யூனியன் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருந்தார். இதற்கு, போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த பணிமனைகள் முன் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதனால், அஸ்வத்தாமாவையும், கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜாவையும் போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர்.

 வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமா, உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் போலீசார் நடத்திய சமரச பேச்ச தோல்வி அடைந்தது. மேலும், பல பணிமனைகளில் தொழிலாளர்கள் கத்தி, பெட்ரோல் கேன் வைத்துக் கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தால் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது. அனைத்து பணிமனைகள் முன்பாக 500 மீட்டர் தொலைவுக்கு போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories: