×

பயிற்சி மருத்துவர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தையின் கைகளில் எலும்பு முறிவு தலையில் காயம் ஏற்பட்டதாக புகார்

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை  பூச்சம்மாள் தெருவை சேர்ந்தவர் கோதண்டம் (30). இவரது மனைவி ஆரோக்கிய மேரி  (26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, நீர்ச்சத்து  குறைவு காரணமாக   10 நாட்கள் கழித்து பிரசவம் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதம் 13ம் தேதி ஆரோக்கிய மேரிக்கு பிரசவ  வலி ஏற்பட்டதால்   தாய் மற்றும் குழந்தையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், அவரது மாமியாரிடம் கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது. பின்னர், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், கண்ணாடி அறையில் வைத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தையின் தாய்  9 நாட்கள்  கழித்து, குழந்தையை பார்த்தபோது, குழந்தையின் இரண்டு கைகளிலும் கட்டுப்போட்டு இருப்பதையும், தலையில் காயம் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, குழந்தை எடை அதிகமாக இருந்தால் பிரசவத்தின்போது,  குழந்தையை வெளியே எடுக்கும் போது கைகளில் எலும்பு முறிவு, மற்றும் தலையில்  காயம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர். இதுபற்றி உறவினர்கள் ஆரோக்கிய மேரியிடம் கேட்டபோது, தனக்கு பிரசவம் பார்த்தவர் பயிற்சி மருத்துவர் என்றும், அவர் குழந்தையை கையில் வாங்கும்போது கீழே தவற விட்டார் எனவும், அதன் காரணமாக குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில்  ராயபுரம் போலீசார் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Practitioners ,baby ,childbirth , Practitioners complained , fractured head injury , baby's arms , childbirth
× RELATED (தி.மலை) ஒரு மாத குழந்தை பலி