×

தொழிலாளியை வெட்டிய 2 பேர் கைது

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும், வேலூரை சேர்ந்த ஐயப்பன் (26) என்பவர் நேற்று முன்தினம் இரவு மார்க்கெட் பகுதியில் இருந்தபோது, 2 மர்ம நபர்கள் அவருடன் தகராறில் ஈடுபட்டு, திடீரென கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். மேலும், அவ்வழியே சென்ற ஒருவரை தாக்கி செல்போனை பறித்து  சென்றனர். போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அருணாசலம் (22), மணிகண்டன் (22) ஆகியோர் ஐயப்பனை வெட்டி, செல்போன் பறித்தது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர்.

* அமைந்தகரை பி.பி.தோட்டம் பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த அஜித் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் கத்தியுடன் திரிந்த அதே பகுதியை சேர்ந்த பரத் (36), சுந்தரகிராமணி தோட்டம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (47), காந்தி நகரை சேர்ந்த பவித்ரன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* தேனாம்பேட்டையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஆழ்வார்பேட்டையை சேர்ந்த கோபிகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் ேதடி வருகின்றனர்.
* வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்த ஆனந்தி (32), நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே தனது மொபட்டை நிறுத்தியிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது, மொபட் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் மொபட் முழுவதும் எரிந்து நாசமானது.
* காசிமேடு பகுதியை சேர்ந்த  திருப்பதி (35) என்பவரை முன்விரோத தகராறில் கத்தியால் வெட்டிய வழக்கில், புதுவண்ணாரப்பேட்டை ஒத்தவாடை தெருவை சேர்ந்த ரவுடி வசந்த் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் சண்முகம் (35). இவரது மனைவி ராஜேஸ்வரி (32). தம்பதிக்கு லித்திகா, கனிமொழி என்ற மகள்கள் உள்ளனர். கடந்த 3ம் தேதி, சண்முகம் குடும்ப தகராறில்  தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு நேற்று முன்தினம் காரிய சடங்குகள் நடந்தது.
கணவன் இறந்த துக்கத்தில் இருந்த ராஜேஸ்வரி, உறவினர்கள் சென்றவுடன் வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அவரின் 2 பெண் குழந்தைகளும் ஆதரவின்றி தவித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags : arrests , Two arrested , slashing worker
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...