பெண் பட்டதாரி ஊழியரின் கல்விச்சான்றை வங்கியில் வைத்து 4 லட்சம் கடன் பெற்று மோசடி : கம்பெனி உரிமையாளர் மீது வழக்கு

சென்னை: பெண் பட்டதாரி ஊழியரின் கல்வி சான்றிதழை வங்கியில் வைத்து 4 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த, கன்சல்டன்சி நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். நங்கநல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. பொறியியல் பட்டதாரியான இவர், பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். அப்போது, வடபழனியில் உள்ள கன்சல்டன்சி நிறுவனத்தை அணுகியபோது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பங்கஜவல்லி என்பவர், எங்களது நிறுவனத்தில் மாதம் 18,000 சம்பளத்தில் வேலைக்கு சேரலாம், என்றார். இதையடுத்து, ஸ்ரீவித்யா அங்கு வேலைக்கு சேர்ந்தார். அப்போது, அவரின் கல்விச் சான்றிதழ் அசலை, பங்கஜவல்லி வாங்கிக்கொண்டார். இந்நிலையில், 2 மாதங்களாகியும் வித்யாவுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து நிறுவன உரிமையாளர் பங்கஜவல்லியிடம் கேட்டபோது, பிறகு தருவதாக அலைக்கழித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ஸ்ரீவித்யா, எனது கல்விச் சான்றிதழை கொடுங்கள், நான் வேலைக்கு வரவில்லை, என கேட்டுள்ளார். ஆனால், கல்விச் சான்றிதழை தரவில்லை, என கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவித்யா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில், கன்சல்டன்சி நிறுவன உரிமையாளர் பங்கஜவல்லி, ஸ்ரீவித்யாவுக்கு தெரியாமல், அவரது கல்விச் சான்றிதழை வங்கியில் கொடுத்து 4 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: