பரபரப்பு செய்திகளில் சுய கவனம் தேவை : துணை ஜனாதிபதி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘பரபரப்பு செய்திகளில் பத்திரிகையாளர்கள் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும்’’ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். இந்தியாவில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா’ அமைப்பு, கடந்த 1966ல் நவம்பர் 16ம் தேதி நிறுவப்பட்டது. இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பத்திரிகைகளின் சுதந்திரத்தை பாதுகாப்பது, அதன் செயல்பாடுகளை கண்காணித்தல், தொழில்முறை நெறிமுறைகளை பேணுதல் இந்த அமைப்பின் முக்கிய பணியாகும். இந்நிலையில், இந்த ஆண்டு தேசிய பத்திரிகை தினம், டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில், ‘‘பரபரப்பு செய்திகள் என்பது தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.

Advertising
Advertising

ஆனால், பரபரப்பு செய்திகள் என்றாலே அவை அர்த்தமற்றதாக இருப்பதுதான் கவலைக்குரியது. இதுபோன்ற பரபரப்பு செய்திகளில், பத்திரிகையாளர்கள் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும்’’ என்றார். இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சிறந்த பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசுகையில், ``பத்திரிகைகளின் சுதந்திரம் என்பது பொறுப்புள்ள சுதந்திரம். பொறுப்புடன் கூடிய சுதந்திரம் நமக்கு அவசியமாகிறது. பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளை விட, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளே நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்த போலி செய்திகளை தடுப்பது பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: