நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் நாளை துவக்கம் அனைத்து கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குவதை முன்னிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி உட்பட பலர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கி மொத்தம் 20 நாட்கள் நடைபெறவுள்ளது.  கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன், அவையை சுமூகமாக நடத்துவது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கூட்டுவர். அதன்படி நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்திருந்தார். இதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் சார்பில் அதிர் ரஞ்சன், சிவசேனா சார்பில் விநாயக் ராத், பா.ஜ சார்பில் அர்ஜூன் ராம் மெஹ்வல், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திரிணாமுல் சார்பில் சுதீப் பந்தோபத்யாயா, பகுஜன் சமாஜ் சார்பில் டேனிஸ் அலி, லோக் ஜனசக்தி சார்பில் சிராக் பஸ்வான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குளிர்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். இந்தக் கூட்டத் தொடரில் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும், டெல்லியில் உள்ள 1,728 அங்கீகரிக்கப்படாத காலனிகளை அங்கீரிப்பது உட்பட பல மசோதாக்களை கொண்டுவரவும் பா.ஜ அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘குளிர்காலக் கூட்டத்தை சுமூகமாக நடத்த, அனைத்துக் கட்சி தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

அதற்கு அவர்களும் உறுதி அளித்துள்ளனர். பல விஷயங்களை எழுப்ப விரும்புவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அலுவல் ஆலோசனை குழுவில் விவாதித்தபின், பல விஷயங்களை விவாதிக்க முயற்சி மேற்கொள்வோம்’’ என்றார்.

பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் ஆப் தகவல்களை உளவு பார்த்த விவகாரத்தையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘பாத்திமா மரணம் விவகாரத்தை எழுப்ப திமுக முடிவு’

கூட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், ‘‘பொருளாதார மந்தநிலை குறித்து நாளை தொடங்க உள்ள குளிர்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தவிர தமிழகத்திற்கு தேவையான அனைத்து பிரச்னைகள் குறித்து பேசப்படும். மேலும் ஐஐடியில் மாணவி பாத்திமா மர்ம மரணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற குழு துணை தலைவராக இருக்கும் எம்பி கனிமொழி பேச உள்ளார். இதைத்தவிர இந்தியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்புஇன்மை, கல்வி உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் குறித்து திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து சபாநாயகர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது’’ என்றார்.

Related Stories: