ஏழை பெண்கள் மகப்பேறு நிதியுதவி திட்டம் கிடப்பில் 1.28 லட்சம் விண்ணப்பங்கள் : கலக்கத்தில் கர்ப்பிணிகள்

* சிறப்பு செய்தி

Advertising
Advertising

தமிழக அரசு சார்பில், டாக்டர் முத்துலட்சுமி  ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை கர்ப்பிணிகளுக்கு  பேறுகாலத்தின்போது ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்யவும், அவர்கள் சத்தான  உணவுகளை உண்ண வழிவகை செய்யவும், பேறுகாலத்துக்கு முன் இரு மாதங்கள் மற்றும் பேறு காலத்திற்கு பின்  இரு மாதங்களுக்கு என மொத்தம் 4 மாதங்களுக்கு தலா 50 வீதம் மொத்தம் 200 வழங்க,  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், கடந்த 2-5-1989 அன்று  இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழக அரசின் பிற்பட்டோர் நலம், சத்துணவு திட்டம் மற்றும்  சமூக நலத்துறையின்கீழ் அரசாணை பிறப்பிக்கப்பட்டு (அரசாணை (நிலை) எண்: 369)  பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1998ம் ஆண்டு இத்திட்டத்தின் நிதியுதவி 500 ரூபாயாக  உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர், 2006-07 நிதியாண்டு முதல் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2012ம் ஆண்டு தொடர்ந்து, இத்தொகை 12,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. கடந்த 1.4.2018 முதல் 18,000 ரூபாயாக மீண்டும்  உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. இத்திட்டம் தற்போது சுகாதார துறையின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகையில், முதல் தவணையாக, கருவுற்ற ஏழாவது மாதத்தில் 5 ஆயிரம், குழந்தை பிறந்த பின்னர் 2வது, 3வது தவணையாக முறையே தலா 4 ஆயிரம், பிரசவத்துக்கு பின்னர் முத்தடுப்பு ஊசி செலுத்தியதும் இறுதி தவணையாக 5 ஆயிரம் என நான்கு தவணையில் 18 ஆயிரம் உதவித்தொகை  வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற விண்ணப்பம் செய்தவர்களின் பட்டியல் விறு விறுப்பாக பரிசீலனை செய்யப்பட்டு, உடனுக்குடன் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 6 மாத காலமாக திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நிதி ஒதுக்கீட்டை காரணம் காட்டி, கடந்த 3 மாத காலமாக உதவித்தொகை வழங்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும், 230.40 கோடி நிதியுதவி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசின் நிதிஒதுக்கீடு வந்த பிறகே இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜ்னா  திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ₹5 ஆயிரம் உதவித்தொகையை தமிழக  அரசின் உதவித்தொகையுடன் இணைத்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனால், தமிழகம்  முழுவதும் சில இடங்களில் உதவித்தொகை  வழங்கப்படவில்லை. தற்போது, இணைப்பு பணி முடிவடைந்து, உதவித்தொகை வழங்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: