2 நாளாக ஐ.டி. அதிகாரிகள் சோதனை கரூர் கொசுவலை நிறுவனத்தில் 35 கோடி ரொக்கம் சிக்கியது : 400 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு

கரூர்: கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ஷோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தயாரிக்கும்  நிறுவனத்தை நடத்தி வருகிறார். கரூர் வெண்ணைமலையில் கொசுவலை நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. செம்மடை என்ற இடத்தில் பேக்டரி செயல்படுகிறது. இங்கு தயார் செய்யப்படும் கொசுவலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை, ராம்நகரில் உள்ள உரிமையாளர் வீடு, கோவை சாலை, சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்றுமுன்தினம் மதியம் திருச்சி, மதுரை, கோவை, கரூர், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து அதிரடி சோதனையை தொடங்கினர். இரவு 11 மணி சோதனை நடந்தது. இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நீடித்தது.

நேற்று மாலை உரிமையாளர் சிவசாமி  வீட்டில்  நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது சுமார் 35  கோடி ரூபாய் வருமான வரித் துறையால்  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மாலையில் சோதனை முடிந்தது. இது குறித்து சோதனையில் ஈடுபட்ட வருமான வரி்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கொசுவலை நிறுவனத்தில் 2 நாட்கள் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. மேலும் கணக்கில் வராத பணமும் கோடிக்கணக்கில் சிக்கியது. ₹500, 2000 கட்டுகளாக ₹35 கோடி வரை சிக்கி இருக்கலாம் என தெரிகிறது. பணத்தை எண்ணும் பணி நடந்து வருகிறது. இதன் முடிவில் தான் எவ்வளவு பணம் பிடிபட்டது என முழுமையாக தெரிய வரும். கணக்குகளை ஆய்வு செய்ததில் 400 கோடி அளவுக்கு இந்த நிறுவனம் வரிஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. கணக்குகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

Related Stories: