×

மக்கள் பிரச்னையில் அரசு கவனம் செலுத்தாவிட்டால் திமுக சார்பில் பெரும் போராட்டம் : தர்மபுரி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

தர்மபுரி: மக்கள் பிரச்னையில் தமிழக அரசு கவனம் செலுத்தாவிட்டால், திமுக சார்பில் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார். தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று மாலை திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மத்திய அரசு மமதையில் இருக்கிறது.  மாநில  அரசு எதற்கும் உதவாத அரசாக இருக்கிறது. இதில், இருந்து மக்களை திசை   திருப்பவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தார்கள். இப்போது  மிசாவில்   இருந்தாரா மு.க.ஸ்டாலின் என்று கேள்வி எழுப்புகிறார்கள். மிசாவில் சிறையில்   இருந்து கடுமையான துயரங்களை அனுபவித்தபோது கூட தாங்கிக் கொண்டேன். ஆனால்,   தற்போது கேடு கெட்ட ஜென்மங்கள் அதனை சொல்லி விமர்சிப்பதால்   வேதனைப்படுகிறேன்.  இங்கு  அமைச்சர்களை பார்க்கிறேன். தங்களை அரசியல் மேதைகளாக  கருதிக் கொண்டு விதம்  விதமாக பேட்டி கொடுக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள்  என்பது அவர்களுக்கும்  தெரியாது. கேள்வி கேட்கும் நிருபருக்கும் தெரியாது.  அவர்களது குறையை  பற்றி எந்த நிருபரும் கேள்வி கேட்பதில்லை.  இது, 100க்கு 100 சதவீதம் தோற்றுப் போன  அரசு. கையாலாகாத  அரசு. உள்ளூரில் எந்த திட்டமும் இல்லை. இதனால், வெளிநாட்டு  முதலீடு என்று  சொல்லி மக்களை ஏமாற்றுவதற்காக அமெரிக்கா, லண்டன், துபாய் என  சென்று  கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த முதலீட்டாளரும் இந்த  ஆட்சியை  நம்ப தயாராக இல்லை.

ஏன் என்றால், இது உதவாக்கரை அரசு. அப்படியே  நம்பி  தொழில் முதலீடு செய்ய வந்தாலும் இவர்கள் கேட்கும் கமிஷனை பார்த்து  மயங்கி  விழுந்து விடுகிறார்கள். இது, எடப்பாடி தலைமையில் 30  கொள்ளையர்கள்  சேர்ந்து நடத்தும் கார்ப்பரேட் கிரிமினல் கொள்ளை ஆட்சி.  எடப்பாடி பழனிசாமி  பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த  3150 கோடி ரூபாய் ஊழல்  குறித்து திமுக சார்பில் நீதிகேட்டு வழக்கு  தொடர்ந்தோம். அதற்கு தடை  உத்தரவு பெற்றவர் இதுவரை ஒரு விளக்கமும்  தரவில்லை. அதேபோல், குடிமராமத்து  திட்டத்தில் 1330 கோடி ரூபாய் ஊழல்  நடந்துள்ளது. மேலும், கமிஷன் கேட்டு  கிடைக்காததால் மத்திய அரசு கொடுத்த  5000 கோடி ரூபாய் திரும்பிச் சென்றது.  இதனையெல்லாம் வைத்து தான் உதவாக்கரை  அரசு என்கிறேன். இதனை சொன்னால்  அவர்களுக்கு கோபம் வருகிறது. தற்போது,  காவல்துறைக்கு உபகரணம் வாங்கியதில்  350 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.  டிஜிபியாக ராஜேந்திரன் இருந்தபோது நடந்த  இந்த ஊழல் குறித்து இதுவரையிலும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

துணை முதல்வராக  இருந்த ஓபிஎஸ் பினாமி பெயரில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார் என்று  ஆதாரத்துடன் சொன்னேன். இன்னும் அதற்கான விளக்கம் வரவில்லை. அதேபோல், மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல், குவாரி ஊழல்  என்று பல்வேறு ஊழல்களை பட்டியலிட்டு அதற்கும் எந்தவிதமான பதிலும் இல்லை.  இதேபோல், ஊழல் ஊற்றுக்கண்ணாக திழைப்பவர்கள் இரண்டு பெல் அமைச்சர்கள். பெல்  என்றால் மணி. ஒரு மணி தங்கமணி, மற்றொரு மணி வேலுமணி. இவர்கள் இருவரும்  எடப்பாடிக்கு இரண்டு கண்கள். இவர்கள் ஊடகங்களின் பக்கம் வரமாட்டார்கள்.  எடப்பாடி அரசை காப்பாற்றுவதற்கான அனைத்து பணிகளையும் இவர்கள் தான்  செய்வார்கள். இதில், வேலுமணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் என்பதை விட, ஊழல்  ஆட்சித்துறை அமைச்சர் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். இன்று கூட  டெங்கு தடுப்பு பணி திட்டத்திற்கு என்று கூறி 6000 கோடி வரை ஊழல்  நடந்துள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், ஸ்மார்ட் சிட்டியில் ஊழல், எல்இஇடி பல்பு வாங்கியதில் ஊழல், குப்பை வண்டி வாங்கியதில் ஊழல் என்று வண்டி வண்டியாக ஊழல் செய்தவர் மாமணி வேலுமணி. மின்வாரியத்தில் பல்வேறு வழிகளில் ஊழல், பதுக்கல் என்று மலையளவு ஊழல் செய்த மாமணி தங்கமணி. எடப்பாடி ஊழல் ஆட்சியில் இவர்கள் மட்டுமல்ல, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்று மொத்தத்தில் இதுஒரு கிரிமினல் கார்ப்பரேட் ஆட்சியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஊழல் நிறைந்த உதவாக்கரையான பொய்யர்களின் கையில் ஆட்சி உள்ளது.

இந்த லட்சணத்தில் பொய் மேல் பொய்களை அடுக்கிக் கொண்டு சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும், அதற்காக விருதுகளை பெற்றேன் என்கிறார் எடப்பாடி. திருட்டு மற்றும் கொலை-கற்பழிப்பு, பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீதும், பேனர் சம்பவத்தில் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மீதும், நீதிமன்றம் தலையிட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்படுகிறது. பேனர் விழுந்து இளம்பெண் சுப இறந்ததற்கு முதல்வரோ, அமைச்சர்களோ, கட்சியோ, அரசு நிர்வாகமோ ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. கோவையில் ராஜேஸ்வரி என்ற பெண் கொடிக்கம்பம் விழுந்து பாதிக்கப்பட்ட சம்பவத்தில், அந்த குடும்பத்தினரை மிரட்டி உள்ளனர். கொடிக்கம்பம் விழுந்த சம்பவம் குறித்து முதல்வர் தெரியாது என்கிறார். நீதிமன்றம் கொடிக்கம்பம் நட தடை விதிக்கவில்லையே என்று கூறுகிறார். இப்படி சராசரி அறிவு கூட இல்லாத எடப்பாடி, கடப்பாரையை முழுங்கி விட்டு அமைதியாக இருக்க கூடிய ஆசாமி. எதுவுமே தெரியாத அவர், அரசு டெண்டர்களில் எத்தனை கோடி சுருட்டலாம் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்.

இன்று எல்லா தரப்பு மக்களும் இவர்களால் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது. புதிய தொழிற்சாலைகள் துவங்கப்படவில்லை. பழைய தொழிற்சாலைகள் மூடப்படுகிறது. வடமாநிலங்களிலிருந்து வரும் சில பத்திரிகைகள் 40 ஆண்டுகளில் இப்படி ஒரு பொருளாதார சீரழிவு இல்லை என கூறுகின்றன. உப்பு, மிளகு மற்றும் சர்க்கரை வாங்க முடியாத நிலையில் தான் மக்கள் உள்ளனர். எனவே, இதுபோன்ற பிரச்னைகளில் மத்திய -மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவனம் செலுத்தாவிட்டால், திமுக சார்பில் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து பெரும் போராட்டம் நடத்தப்படும். தமிழகம் மிகப்பெரும் பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது. அதனை தூக்கி நிறுத்த திமுக பெரும் போராட்டத்தை நடத்தும். போராட்டத்தின் முடிவில் கோட்டையில் இருக்கும் முதலமைச்சரும், அவருக்கு துணையாக இருந்த அமைச்சர்களும் சிறையில் இருப்பார்கள். அதற்கான அறைகூவலை தர்மபுரி கூட்டத்தில் விடுக்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : DMK ,government ,speech ,meeting ,MK Stalin ,Dharmapuri ,ADMK , ADMK,not pay attention ,people's issue, DMK will struggle
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்