×

கேரளாவுக்கு இனி சுற்றிச்செல்ல வேண்டாம்: செங்கோட்டை-கொல்லம் வழித்தடத்தில் மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து

நாகர்கோவில்:  நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் புனலுார் வரை 50 கி.மீ., மீட்டர்கேஜ் ரயில் பாதையை, அகலப் பாதையாக்கும் பணிகள் 2010 செப்டம்பர் மாதம் 20ம் தேதி துவங்கின. மொத்தம் ₹358 கோடி  மதிப்பில் கேரள எல்லைக்குள் 37.38 கி.மீ தூரமும், தமிழக எல்லைக்குள் 12.12 கி.மீ., தூரமும் என்று பணிகள் நடந்தன. நிதி ஒதுக்கீட்டு தாமதத்தால் 6 ஆண்டுகளுக்கும் மேலானது. பணிகள் முடிந்து மீண்டும் ரயில் போக்குவரத்து  தொடங்கினாலும் 2 ஆண்டுகளாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கவில்லை. ரயில்பாதை மீட்டர் கேஜ் ஆக இருந்தபோது சரக்கு ரயில் போக்குவரத்து இருந்து வந்தது.  தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் இந்த பாதை வழியாக சரக்கு போக்குவரத்து நடைபெற்றது. இந்த பாதை முடங்கிய நிலையில் சரக்கு போக்குவரத்து திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில், குழித்துறை,  திருவனந்தபுரம் வழியாக நடைபெற்றது.

இதனால் கடந்த 9 ஆண்டுகளாக பயணிகள் ரயில்கள் போக்குவரத்தில் சிரமங்கள் அதிகம் ஏற்பட்டது. இணைப்பு ரயில்கள் வருகையால் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம் போன்ற  பிரச்னைகளும் ஏற்பட்டன. இந்நிலையில் செங்கோட்டை-புனலூர்- கொல்லம் பாதையில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்க சென்னையில் வணிக பிரிவு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த பாதையில் முன் மற்றும் பின் பகுதிகளில் இன்ஜின் கொண்டு  பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சரக்கு ரயில்களும் இதுபோன்றே இயக்கப்படும். மேலும் இந்த பாதை மின்மயமாக்கும் பணிகளும் 2 மாதங்களில் முடிக்க  திட்டமிடப்பட்டுள்ளது.

 இதன் மூலம் கேரளாவுக்கு சரக்கு ரயில்கள்  போக்குவரத்து முழுவதும் இந்த பாதை வழியாக இருக்கும்.குமரி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து கூடுதல் ரயில்கள் புதிதாக இயக்கவும், இது வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 9 ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொச்சிக்கு நாகர்கோவில் வழியாகவே சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 240 கி.மீ தூரத்தை கடக்க வேண்டியிருந்தது. இனி வாஞ்சிமணியாச்சி, ெசங்கோட்டை, வழியாக கேரளத்திற்கு  சரக்கு ரயில்கள் எளிதாக கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.Tags : Senkottai-Kollam ,Kerala ,route , No longer moving to Kerala: Freight train on the Senkottai-Kollam route
× RELATED ஓசூரில் இருந்து பங்களாதேஷ் சென்ற 100...