உணவு பாதுகாப்பு, தர ஆணைய முன்மொழிவுக்கு வரவேற்பு: பள்ளிகள் அருகே தரமற்ற உணவுப்பொருட்களுக்கு தடை: பீட்சா, பர்கருக்கு குட்பை

நெல்லை: பள்ளிகள் அருகே தரமற்ற மற்றும் துரித உணவு பொருட்களை விற்க தடை விதிக்கும் மத்திய உணவு பாதுகாப்பு, தர ஆணையத்தின் உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பள்ளிகளில்  மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவுகள் அவசியம் என பள்ளி நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் பாரம்பரிய உணவு முறைகள் மாறியதால் இளம் வயதிலே சிறுவர்களை கூட பல்வேறு நோய்கள் தாக்கி வருகின்றன. நகரமயமாக்கலின் விளைவாக மேற்கத்திய உணவு முறைக்கு அடிமையாகும் மாணவ, மாணவிகள் இளம்  வயதிலேயே உடல் பருமன் அதிகமாதல், கொழுப்பு அதிகரிப்பு, நீரழிவு உள்ளிட்ட நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

நகரங்களில் காணப்படும் பெரும்பாலான பள்ளிகள் தங்கள் வளாகத்திற்குள் சிப்ஸ், பீட்சா, பர்க்கர் உள்ளிட்ட பேக்கிங் பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன. இந்நிலையில் பள்ளிகள் வளாகத்தில் இருந்து 50 மீட்டருக்குள் தரமற்ற  உணவு பொருட்கள் மற்றும் நொறுக்கு தீனிகளை விற்க கூடாது என மத்திய உணவு பாதுகாப்பு, தர ஆணையம் முன்மொழிந்துள்ளது.இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளன. நொறுக்கு தீனிகளில் காணப்படும் அதிகமான கொழுப்பு, உப்பு மற்றும்  கூடுதல் இனிப்பு சுவைகள் மாணவ, மாணவிகளின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக உள்ளது. மத்திய உணவு பாதுகாப்பு ஆணையம் பள்ளி வளாகத்திற்குள்ளும், வெளியேயும் சமோசா, குலோப்ஜாமுன், பீட்சா, பர்க்கர், ப்ரைடு சிப்ஸ் உள்ளிட்ட  உணவு பண்டங்கள் விற்பனையை தடை செய்திட வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை மகாராஜநகர் ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி  தாளாளர் ஜெயேந்திரன் மணி கூறுகையில், ‘‘ எங்கள் பள்ளியை பொறுத்தவரை கேன்டீன் என்பதே கிடையாது. பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் நாட்களில்  மட்டும் நல்ல ஆரோக்கிய உணவுகளை வாங்கி வழங்குவோம். தரமான உணவுகளை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவது முக்கியம்.’’ என்றார்.   ராமநேரி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் கூறுகையில், ‘‘கிராமப்புற பள்ளிகளில் நொறுக்கு தீனி உணவுகளுக்கு வாய்ப்பு குறைவு. இருப்பினும் மாணவர்கள் மத்தியில் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தி  வருகிறோம். ஈ மொய்க்கும் பொருட்களை வாங்கி சாப்பிட தடை விதித்துள்ளோம்.’’ என்றார்.

அறுசுவை உணவு அவசியம்:  இதுகுறித்து கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரம் கூறுகையில், ‘‘மாறி வரும் உலகில் மாணவ, மாணவிகள் மத்தியில் நொறுக்கு தீனிகளுக்கு தடை நல்லது. நமது பாரம்பரியத்தில் உள்ள  அறுசுவை உணவுகள் நமக்கு அவசியமான ஒன்றாகும். அறுசுவை உணவுகளை சாப்பிடும்போது நமக்கு நோய் வராது. அதிலும் துவர்ப்பு சுவை முக்கியம். வளரும் பெண்களுக்கு துவர்ப்பு சுவையின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.  மாணவ, மாணவிகள் மத்தியில் நொறுக்கு தீனிகள் ஒருபுறமிருக்க, புரோட்டா மோகமும் அதிகமுள்ளது. புரோட்டா என்பது கோதுமையின் நார்சத்தை முற்றிலுமாக நீக்கிய மைதாவில் தயாரிக்கப்படுகிறது.

மேலும் மைதாவை வெளுப்பாக்க  பென்சாயின் பெராக்சைடு என்னும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. புரோட்டா மட்டுமல்ல மைதாவில் தயாரிக்கப்படும் பேக்கரி அயிட்டங்களும் நமக்கு தீங்கு விளைவிப்பவையே.  நார்சத்துள்ள உணவுகளே நமக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தாது.  எனவே மாம்பழம், சீனி அவரைக்காய், பீன்ஸ் உள்ளிட்ட நார்சத்துமிக்க உணவு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள மாணவர்களை வலியுறுத்தி வருகிறோம். நெல்லிக்காய், கொய்யா பழம், பப்பாளி, முருங்கை கீரை உள்ளிட்ட வைட்டமின்  சத்துமிக்க உணவுகளை மாணவ, மாணவிகள் அதிகம் சாப்பிட வலியுறுத்தி வருகிறோம்’’ என்றார்.

Related Stories: