போதிய வருவாய் இல்லாததால் வேறு தொழிலை நாடும் நிலை கோயில்களுக்கு பூஜை செய்ய வரமறுக்கும் அர்ச்சகர்கள்: ஒருவரே பல கோயில்களுக்கும் பூஜை செய்யும் கட்டாயம்

வேலூர்: போதிய வருவாயின்றி வேறு தொழிலை நாடிச் செல்லும் கட்டாயத்துக்கு ஆளானதால் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சதவீத திருக்கோயில்கள் பூஜை செய்ய அர்ச்சகர்கள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 1.50 லட்சம் சிவாச்சாரியார்களும், 50 ஆயிரம் பட்டாச்சாரியார்களும் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்கள் தவிர கிராமப்புறங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்களும், பிற சமூகத்தை சேர்ந்த பூசாரிகளும்  உள்ளனர். இவர்களில் வருவாய் உள்ள கோயில்களிலும், மக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோயில்களில் ஊதியமில்லாவிட்டாலும், தட்டில் விழும் சில்லரைகள் அவர்களது வாழ்க்கையை நகர்த்த உதவும்.ஆனால்  ஒரு கால பூஜையும் இல்லாமல்  வருவாய் இல்லாத பல கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளின் நிலை கேள்விக்குறிதான்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த 86-87ம் ஆண்டில் எல்லா கோயில்களின் வருமானத்தையும் இணைத்து அதில் 40 சதவீதத்தை கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியத்துக்காக வழங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.  ஆனால், அதற்கு கிளம்பிய எதிர்ப்பால் கைவிடப்பட்டது. அதேநேரத்தில் அப்போது 17 ஆண்டுகளாக ஊதியமின்றி தவித்த அர்ச்சகர்களுக்கு ₹8 கோடி வரை ஊதியமாக சேர்த்து வழங்க அன்றைய முதல்வர் எம்ஜிஆர் உத்தரவிட்டார். அதன்பிறகு  மீண்டும் அவர்கள் கவனிப்பாரின்றி விடப்பட்டனர்.

இதனால் வேதங்களை கற்றுணர்ந்த புதியவர்களும் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.  இதன் விளைவு பல கோயில்களில் இன்று அர்ச்சகர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள வருவாய் உள்ள கோயில்களை தவிர்த்து வருவாய் இல்லாத கோயில்கள், கிராமக் கோயில்கள், தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் ஆயிரக்கணக்கில் அர்ச்சகர்கள் யாருமின்றி தவிக்கும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளன. இச்சிக்கலுக்கு தீர்வு காண அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேதாகம பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

அர்ச்சகர் பணியை தொழிலாக அங்கீகரிக்க வேண்டும்.  அவர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்து ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். அதற்கான நிதி ஆதாரத்தை பெறுவதற்கான வழியையும் காண வேண்டும் என்பதுதான் அர்ச்சகர்களின் கோரிக்கை.

இதற்காக ஒரு பகுதியில் அதிக வருவாய் உள்ள கோயிலுடன் அங்குள்ள பிற சிறிய கோயில்களையும் இணைத்து அந்த வருவாயை கொண்டு அர்ச்சகர்களுக்கு ஊதியம் வழங்குவதுடன் ஒரு கால பூஜை நடைபெறும் கோயிலில் மூன்று கால  பூஜைகளையும் நடத்தலாம். என்றும் அர்ச்சகர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அர்ச்சகர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, ‘தமிழகத்தில் பாடல் பெற்ற, ஸ்தல பெருமை வாய்ந்த கோயில்களிலும் வருவாய் இல்லாத கோயில்கள் உள்ளன. இத்தகைய கோயில்களில் பூஜை செய்வது தங்கள்  கடமை என்று ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்களும் உள்ளனர். தற்போது திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் இல்லாத நிலை உள்ளது உண்மைதான். அர்ச்சகர்களான எங்களுக்கும் குடும்பம் உள்ளது. எங்கள் பிள்ளைகள் எங்களை விட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே.  அதனால் இந்த தொழில் எங்களோடு போகட்டும்.

எங்கள் பிள்ளைகளாவது டாக்டராகவோ, இன்ஜினியராகவோ, அரசுத்துறை அதிகாரிகளாகவோ, அரசு ஊழியராகவோ ஆகட்டும் என்பதும் கோயில்களில் அர்ச்சகர்கள் பற்றாக்குறைக்கு காரணமாக  கூறலாம்.  அப்படியே வேதங்களை முற்றும் கற்றுவிட்டு இங்கு குறைந்த ஊதியத்தில் பணிபுரிவதை காட்டிலும், அதே பணியை அதே கோயிலில் செய்வதன் மூலம் தங்கள் பொருளாதாரம் உயரும் என்ற நிலையில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் வெளிப்படையானது.

இப்போது தமிழகம் முழுவதும் சிறிய, பெரிய கோயில்களில் ஊதியமின்றி கோயில் அர்ச்சகர்கள் மனதுக்குள் புழுங்கி வருகின்றனர். அப்படியே ஊதியம் வழங்கினாலும் ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் சொற்ப ஊதியத்தால் பலனில்லை  என்றும் அவர்கள் கூறுகின்றனர்.  இதுபோன்ற பல பிரச்னைகளை அரசு தீர ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு எதிர்காலம் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டு அவர்கள் வேறு தொழிலுக்கு செல்ல வேண்டியது வரலாம். அத்தகைய  சூழலில் கோயில்களில் பூஜைகள் தடைபடலாம். இது நாட்டுக்கு நல்லதல்ல என்பதையும் ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டும். இதனை தவிர்க்க மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களை கணக்கெடுத்து அவற்றில் ஆகமமுறைப்படி பூஜைகள் நடக்கவும், அர்ச்சகர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கவும், அதை மாதந்தோறும் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று  கூறினார்.    

அறநிலையத்துறை அதிகாரிகள் கருத்து:

‘இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வருவாயை பொறுத்தே அர்ச்சகர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. வருவாய் இல்லாத கோயில்களில் ஒரு கால பூஜைக்கு வழங்கப்படும் நிதியை கொண்டு அர்ச்சகர்களுக்கு  ஊதியம் ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. உதாரணத்துக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது என்றால் ரூ.2500 வழங்கப்படும். பின்தங்கிய பகுதிகளில் உள்ள கோயில்களில் ஒரு கால பூஜை நடைபெற பொதுமக்கள் பங்களிப்பு ரூ.10 ஆயிரம்  மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பங்களிப்பு ரூ.90 ஆயிரம் சேர்த்து ரூ.1 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.

அதில் இருந்து மாதந்தோறும் வரும் ரூ.750ஐ கொண்டு கோயில் பூசாரி தனது செலவினம் உட்பட ஒரு கால பூஜையையும்  தொடர்ந்து மேற்கொள்வார். இந்த பட்டியலில் 492 கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கோயில்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,800ம் வழங்கப்படுகிறது. ’ என்றனர்.

Related Stories:

>