புகைந்த புதையல் புதைந்து போகுமோ?

மார்த்தாண்டம் பகுதியில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் துணிச்சலாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வந்த தக்கலை டிஎஸ்பி திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டார். குட்கா இருந்த குடோன்  உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதும், அவரை இடமாற்றம் செய்யும் முயற்சிகள் வெளியாகின. சில வாரங்களிலேயே அவர் இடமாற்றமும் செய்யப்பட்டார். இதனை போன்று கருங்கல் பகுதியில் புதையல்  கிடைத்ததா? என கேட்டு சந்தேகத்தின் பேரில் பொக்லைன் உரிமையாளர் ஒருவரை ரவுடி கும்பல் ஒன்று கடத்தி சென்று மிரட்டியது. இந்த புகாரை கையில் எடுத்து விசாரித்த குளச்சல் ஏஎஸ்பி இதன் பின்னணியில் வேலியே பயிரை மேய்ந்த  கதையாக சம்பந்தப்பட்ட கருங்கல் ஸ்டேஷன் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர், ஏட்டுகளுக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள்தான் ரவுடி கும்பலுடன் சேர்ந்துகொண்டு கடத்தல் திட்டத்திற்கு உதவியதும் தெரியவர அவர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க எஸ்.பி.க்கு பரிந்துரை செய்தார். அவர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் அந்த ஏஎஸ்பியும் பதவி உயர்வு அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். புதையல் உண்மையில் கிடைத்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை. இவ்வாறு சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்  இடமாற்றம் செய்யப்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியள்ளது. புதையல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முதல் இருவர் இதுவரை பிடிபடவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே வழக்கு தொடர்ந்து சரியான  திசையில் செல்லும். தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீதான பிடியும் இறுகும். அதற்கு முன்பு ஏஎஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கு பதிலாக புதியதாக வந்துள்ள ஏஎஸ்பி இந்த வழக்கை எந்த அளவிற்கு கையாள இருக்கிறார்  என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளிடமும் உள்ளது.

மகளிர் போலீசுன்னா சும்மாவா...!

கோவை மாநகரில் கிழக்கு, மேற்கு, சென்ட்ரல் என மூன்று மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இதில், கிழக்கு மகளிர் காவல் நிலையம் வசூலில் நம்பர் ஒன் என பெயரெடுத்துள்ளது. இங்கு, பணிபுரியும் மூன்று ஸ்டார் அதிகாரி, இரண்டு  ஸ்டார் அதிகாரி என எல்லோரும் வசூல் மழையில் குளிக்கிறாங்க. சமீபத்தில் கணவன்-மனைவி சண்டை விவகாரம் ஒன்று இந்த ஸ்டேஷனுக்கு வந்தது. கணவன், குடும்ப செலவுக்கு பணம் தராமல், தகராறு செய்யுறாரு... என மனைவி புகார்  அளிக்க, வுமன் போலீசார் கணவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். சில மணி நேரம் கவுன்சிலிங் அளித்தனர்.

இனி தவறு செய்யமாட்டேன் என கணவன் வாக்குறுதி அளிக்க, கணவன்-மனைவி இருவரையும் போலீசார்  சந்தோஷமாக அனுப்பி வைத்தனர். அப்போது, கணவனை மட்டும் தனியாக அழைத்து, 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டுப்போ... எனக்கூற அவர் அதிர்ந்து போய்விட்டார். அக்கம் பக்கத்தில் ஓடி, கடன் கேட்டு, கடைசியில் ஆயிரம் ரூபாய்தான்  இருக்கு மேடம்... என கொடுக்க, அதையும் பெற்றுக்கொண்டனர். மீதமுள்ள ஆயிரம் ரூபாயை சீக்கிரமாக கொண்டு வந்து கொடுக்கனும்... என எச்சரித்து அனுப்பினாங்க.. ‘’மனைவி பணம் கேட்டப்ப கொடுக்கல, காவல் நிலையத்தில் பணம்  கேட்டதும் மனிதன் சிட்டா பறந்து கடன் வாங்கி கொடுத்துட்டு போறாரு...’’ என அங்கிருந்தவர்கள் பலமாக கமாண்ட் அடித்தனர். எப்படியோ, மகளிர் ஸ்டேஷன் சுபிட்சமா இருக்கு.

கார், பாஸ்களை லபக்கிய ‘தனி அதிகாரி’

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் என்றால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடும்பத்துடன் கடற்கரையில் கூடி விடுவர். அவர்களுக்கு விவிஐபி கார் பாசில் இருந்து தரிசனம் செய்வது வரை எல்லாவற்றையும்  அதிகாரிகள் பார்த்துக் கொள்வர். இதில் ஓய்வு பெற்ற பல போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவிற்கு மூன்று வண்ணங்களில் 1000 கார் பாஸ்கள் காவல் துறையிடம் மட்டும் ஒப்படைக்கப்பட்டதாம். இந்த  பொறுப்பை முக்கிய அதிகாரிகளுக்கு ‘பாகம்’ வாரியாக பிரித்துக் கொடுக்க தனிப்பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைத்திருந்தாராம் உயர் அதிகாரி.

ஆனால் அந்த அதிகாரியோ தனக்கு வேண்டப்பட்டவர்கள், உறவினர்கள்,  குடும்பத்தினர், நண்பர்கள், ஊர்க்காரர்கள், பெரிய ஆலை நிர்வாகத்தினர், தொழிலதிபர்கள் என புகுந்து விளையாடி விட்டாராம். மாஜி போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு பாஸ் கேட்டதற்கு கூட எல்லாவற்றையும் ஐஜி அந்தஸ்தில் உள்ள  அதிகாரிகளுக்கே கொடுத்துவிட்டேன், தீர்ந்து விட்டது எனக்கூறி கை விரித்து விட்டாராம். இதனால் உயர் போலீஸ் அதிகாரிகள் பலருக்கே பாஸ் கிடைக்கவில்லையாம். கந்த சஷ்டி விழாவும் முடிந்து, சூரசம்ஹாரமும் முடிந்த நிலையில் யார்,  யாருக்கெல்லாம் கார் பாஸ் போச்சு என தற்போது கணக்கெடுப்பு நடந்து வருகிறதாம். இதனால் அந்த அதிகாரி மிரண்டு போயிருக்கிறாராம்.

ஈவ் டீசிங்கெல்லாம் பெரிசா? பெண் போலீசுக்கு அட்வைஸ்

காட்பாடி அடுத்த கல்புதூர் பஸ் நிறுத்தம் தொடங்கி வண்டறந்தாங்கல் கிராமத்துக்கு செல்லும் வழிநெடுகிலும் சாலையோரத்திலேயே குடிமகன்கள் மது அருந்திவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும்  பெண்களை கிண்டலடிப்பதையே வேலையாக வைத்துள்ளனர். இதேபோல், அவ்வழியாக சென்ற பெண் போலீஸ் ஒருவரையும் கிண்டலடித்தார்களாம். இதனால் ஆத்திரமடைந்த பெண் போலீசின் உறவினர்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல்  கொடுத்தனர். ஆனால், 2 மணிநேரத்துக்கு மேலாகியும் போலீசார் வரவில்லையாம். இதற்கிடையில் பெண் போலீசின் உறவினர்கள் குடிபோதையில் இருந்த வாலிபர்களை தட்டி கேட்டதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 ஒரு கட்டத்தில்  பொறுமை இழந்தவர்கள் புகார் அளிப்பதற்காக, பெண் போலீசை அழைத்துக் கொண்டு காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கிருந்த 2 ஸ்டார் அதிகாரி ஒருவர், ‘ஈவ்டீசிங் செய்யுறதெல்லாம் ஒரு விஷயமா? போலீஸ் துறையில்  இருந்து நீ புகார் கொடுத்தால், தேவையில்லாத பிரச்னை வரும்’ என்று அட்வைஸ் கூறி அனுப்பி விட்டாராம். இவ்வளவு நடந்தும் போலீசார் அந்த பகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லையாம். போலீஸ் நிலைமையை இப்படி என்றால்,  பொதுமக்கள் நிலைமையை யாரிடம் போய் சொல்வது என சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

டாகுமெண்ட் மிஸ்ஸிங் வழக்கில்  கல்லா கட்டும் இன்ஸ்பெக்டர்....

மலைக்கோட்டை மாநகரில் வழக்கு பதிவதிலும் கூட அதிக லாபம் சம்பாதிக்கும் இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்ளார். தங்கமான பெயரை கொண்ட அவர், வந்து ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில் அதிகளவில் டாகுமென்ட் மிஸ்ஸிங் வழக்கு  தான் பதிவு செய்துள்ளார்.

டாகுமென்ட் மிஸ்ஸிங் புகார் வந்தால் அல்வா சாப்பிடுவது போல் என போலீசார் சிலாகித்து கூறுகின்றனர். மிஸ்ஸிங் புகார் வந்தால் உடனயாக சிஎஸ்ஆர் பதிவு செய்து அதனை ஒரு காவலரிடம் வழங்கி விசாரணை நடத்தி அவரிடமிருந்து  அறிக்கை பெற வேண்டும். பின் மாநகர சிசிஆர்பி பிரிவிற்கு தகவல் அளித்து, சென்னை அலுவலகத்தில் இருந்து சி அண்ட் ஐ எண் வாங்கி அதன் பின்னரே எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். ஆனால், தங்கமான இன்ஸ்பெக்டர் இந்த  நடைமுறைகளை பாலோஅப் செய்யாமல் புகார்தாரரிடமே ₹20ஆயிரம் முதல் சன்மானமாக பெற்று வழக்கு பதிவு செய்கிறார். இதுவரை ஏராளமான மிஸ்ஸிங் வழக்குகள் பதிந்துள்ளதாக சக காவலர்களே மார்தட்டி கொள்கின்றனர்.

Related Stories: