×

‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்

திருவள்ளூர்: புத்தா் உடற்பயிற்சிக்கூடத்தின் சார்பில், அய்யா அ.துரை நினைவுக்கோப்பைக்கான  ‘கட்டழகன் 2019’ என்ற பெயரில்  ஆணழகன் போட்டி, திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் நடந்தது. இப்போட்டி  55 கிலோ, 60 கிலோ என 2 எடை பிாிவுகளில் நடந்தது. இப்பிரிவுகளில் சிறப்பாக திறமையைவெளிப்படுத்தி முதலிடம் பிடித்த  எஸ்.சிதம்பரத்துக்கு ‘கட்டழகன் 2019’ என்ற பட்டமும், கோப்பையும் வழங்கப்பட்டன. 2வது இடம் பிடித்த  இ.ராஜேஷ் குமாருக்கு ‘நற்தோற்றப் பொலிஞா் 2019’ பட்டம் அளிக்கப்பட்டது. முக்கியப் பிரமுகர்களான அமுதன் துரையரசன், திரைப்பட  இயக்குநா் சி.எம்.லோகு, உலக கராத்தே போட்டியின் நடுவா் ஜெட்லி சம்பத், முன்னாள் தேசிய வலுதூக்கும் வீரா் வ.மதிவாணன், திருச்சி விஜயகாந்த், கராத்தே மாஸ்டர் வடிவழகன், பயிற்சியாளரும், முன்னாள் தமிழக ஆணழகனுமான  து.சீனிவாசன்  ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர்.


முசரவாக்கத்தில் கபடி போட்டி ராஜன் பிரதர்ஸ் அணி சாம்பியன்

சென்னை: காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் காஞ்சிபுரம், சென்னை, வேலூர்,  திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 68  அணிகள் கலந்துகொண்டன. போட்டியை காஞ்சிபுரம் மாவட்ட உரிமையியல்     நீதிமன்ற நீதிபதி திருமால் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருண்குமார்,  முசரவாக்கம்   முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜபதி ஆகியோர் சிறப்பு  விருந்தினர்களாக பங்கேற்றனர்.

ராஜபதி, 2007ம் ஆண்டு ஆசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். இவர், முசரவாக்கம் பிஆர்ஏ அணி சார்பில் இந்தப் போட்டியில் விளையாடினார். அதுபோல், தமிழக காவல்துறையை சேர்ந்த 25க்கும் அதிகமான காவலர்கள் பல அணிகளுக்காக பங்கேற்றனர்.தொடர்ந்து 2 நாட்கள் பகல்/ இரவு ஆட்டமாக போட்டிகள் நடந்தன. இறுதிப் போட்டியில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜன் பிரதர்ஸ் அணி, கடலூரைச் சேர்ந்த கேடிகே செலக்ட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம்  வென்றது. முதலிடம் பிடித்த ராஜன் பிரதர்ஸ் அணிக்கு ₹25 ஆயிரம் மற்றும் 5 அடி உயர பரிசுக் கோப்பையும், 2வது இடம் பிடித்த கேடிகே அணிக்கு
₹20 ஆயிரம், 4 அடி உயர கோப்பையும் வழங்கப்பட்டன. 3வது இடம் பிடித்த முசரவாக்கம் பிஆர்ஏ அணிக்கு ₹10 ஆயிரம், 3 அடி உயர கோப்பை வழங்கப்பட்டது.


அகில இந்திய ரயில்வே வாலிபால் சென்னை ஐசிஎப் சாம்பியன்

சென்னை: அகில இந்திய ரயில்வே மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி ஐசிஎப் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே உள்ளிட்ட மண்டலங்கள், பணிமனைகள் சார்பில் 21 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி ஆட்டத்தில் சென்னை ஐசிஎப் அணியும், கொல்கத்தாவை சேர்ந்த கிழக்கு ரயில்வே அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற  இந்தப் போட்டியில் 25-23, 25-21 என முதல் 2 செட்களையும் கிழக்கு ரயில்வே அணி கைப்பற்றியது.

அதற்குப் பிறகு சுதாரித்த ஐசிஎப் அணி, அடுத்த 3 செட்களையும் 31-29, 25-17, 15-11 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடுமையாகப் போராடிய ஐசிஎப் அணி, 3-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றிபெற்றவர்களுக்கு ஐசிஎப் விளையாட்டுப் பிரிவு தலைவர் ஏ.கே.கக்பால் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.Tags : Chidambaram , When Chidambaram is the champion
× RELATED நிட்டோ ஏடிபி பைனல்ஸ் மெட்வதேவ் சாம்பியன்