உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க 66 இடங்களில் தடுப்பணை: அரசிடம் அறிக்கை தாக்கல்

சென்னை: தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள் உள்ளது. இதில், குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக மேட்டூர், வைகை, முல்லை பெரியாறு, பாபநாசம், பவானிசாகர் உட்பட 15 முக்கிய  அணைகள் அடக்கம். இந்த அணைகளில் பருவமழை காலகட்டத்தில் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அதன் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை  அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர் எந்தெந்த பகுதிகளில் தடுப்பணை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து  அந்த பகுதிகளில் தடுப்பணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2017-18ம் நிதியாண்டில் 74 தடுப்பணைக்கு நிதி பெறப்பட்டு தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

தொடர்ந்து கடந்த 2018-19ம்  நிதியாண்டில் 22 தடுப்பணைகளுக்கு அறிக்கை தயார் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் 2019-2020ம்  நிதியாண்டில் 66 தடுப்பணைகளுக்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் அடுத்தாண்டு பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி  ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறும் போது, ‘பருவமழை காலகட்டத்தில் இருந்து அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தவிர்க்க ஆற்றுப்படுகைளில் எங்கு தடுப்பணை அமைக்க சாத்தியம் என்று  அறியப்படுகிறதோ அங்கு அமைக்கப்படுகிறது. இந்த தடுப்பணை ஒரு அடி முதல் 3 அடி வரை அமைக்கப்படுகிறது. , தடுப்பணை அமைத்தால் நிலத்தடி நீர் மட்டமும் உயர வாய்ப்புள்ளது.

Related Stories: