பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மறு ஆய்வு செய்யக்கோரி 21ம் தேதி ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி வருகிற 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விசிக செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர்  தனியரசு எம்.எல்.ஏ., பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி,  எஸ்.டி.பி.ஐ.மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது, பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட  அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 21ம் தேதி சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கல்வி  நிலையங்களில் செயல்பட்டு வரும் மதவெறி அமைப்புகளை வெளியேற்றவும், அவற்றின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள் மதிக்கக்  கூடிய தலைவர்களின் சிலைகள் மீது தாக்குதல் நடத்துவதும், அந்த சிலைகளை அவமதிப்பு செய்யும் செயல்களும் நடந்தேறி வருகின்றன. இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: