நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் காரணமாக தமிழகத்தில் 10 சாலை மேம்பாட்டு பணிகள் ரத்து?: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதத்தால் பரபரப்பு

சென்னை: நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் காரணமாக தமிழகத்தில் 10 சாலை மேம்பாட்டு பணிகள் ரத்து செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.  தமிழகத்தில் 6,634 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது. இதில், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் தேசிய நெடுஞ்சாலை அலகு பிரிவில் 1,900 கி.மீ நீள சாலைகளும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையக் கட்டுப்பாட்டில் 4,734 கி.மீ  நீள சாலைகளும் உள்ளது. கடந்த 2018-19ம் நிதியாண்டில் ரூ.9,470 கோடியில் 9 சாலைகளை அகலப்படுத்துவது, மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், காரைப்பேட்டை-வாலாஜாபேட்டை பகுதியில் ஆறு வழிச்சாலை  அகல்படுத்தும் பணி மட்டும் செயலாக்கத்தில் எடுத்து கொள்ளப்பட்டன. மற்ற 8 பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், 2019-20ம் நிதியாண்டில் 396 கி.மீ நீளத்திற்கு 8 சாலைகளை அகலப்படுத்துவது, மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் ரூ.6,500 கோடி செலவில் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டன. அதே போன்று பாரத்மாலா திட்டத்தின் கீழ்  ரூ.1,666 கோடி செலவில் சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை, மாமல்லபுரம்-பாண்டிச்சேரி சாலை, உட்பட 14 சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் விரைவு சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.  இதில், நிலம் கையகப்படுத்தும் பணி தாமதத்தால் நிதியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம்-பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி-பூண்டியங்குப்பம், பூண்டியங்குப்பம்-சட்டநாதபுரம், விழுப்புரம்-நாகப்பட்டினம் ஆகிய 4 சாலைகள் திட்டப்பணிகள் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்கா விட்டால் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது. இனி வருங்காலங்களில் நிலம்  கையகப்படுத்தும் பணி முடிந்த பிறகு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு 1.80 லட்சம் கோடி கடன் உள்ளது. இதன் காரணமாக, புதிதாக சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்குவது நிறுத்தி வைக்க இந்திய ேதசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு  செய்துள்ளது. இதனால், தமிழகத்துக்கு தரப்படும் நிதி குறைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணியால் மேலும் 10 சாலை பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என்று  நெடுஞ்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: