திமுக எம்எல்ஏவுக்காக தேர்தல் பிரசாரம் செய்த அரசு ஊழியரின் பணிநீக்கம் ரத்து: ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த அரசு ஊழியரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.  தமிழக நெடுஞ்சாலைத்துறையில், திருவண்ணாமலை கோட்டத்தில் உதவியாளராக  பணியாற்றி வருபவர் விநாயகமூர்த்தி. கடந்த 2011ல் நடந்த தமிழக சட்டசபைதேர்தலின்போது திமுக, எம்.எல்.ஏ.பிச்சாண்டிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம்  செய்ததாக அவர் மீது துறை ரீதியாக குற்றம்சாட்டப்பட்டது.   இது குறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைத்துறைக்கு, தேர்தல் மேற்பார்வையாளர் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், விநாயகமூர்த்தியிடம்  விளக்கம் கேட்டு நெடுஞ்சாலைதுறை கடிதம் அனுப்பியது.

அதற்கு அவர் பதில் அளித்தார். இதையடுத்து, நடந்த விசாரணையில் விநாயகமூர்த்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து அவருக்கான 3 ஆண்டு ஊக்க ஊதியம் ரத்து  செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை குறித்த விவரங்களை அறிக்கையாக தேர்தல் அதிகாரியான, மாவட்ட கலெக்டருக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அறிக்கையை படித்து பார்த்த கலெக்டர், குற்றச்சாட்டு தீவிரமானது  என்பதால், இதுபோன்ற சிறு தண்டனை கொடுப்பதை ஏற்க முடியாது. கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, விநாயகமூர்த்தியை பணி நீக்கம் செய்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்  உத்தரவிட்டார்.

  தன்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி விநாயகமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். தனி நீதிபதியின் இந்த  உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.  இந்தவழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர்அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் வி.ஜெயபிரகாஷ்  நாராயணன் ஆஜராகி வாதிட்டார்.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தனி நீதிபதி தீர்ப்பு சரியானது. விநாயகமூர்த்தியின் செயலுக்கு ஏற்ப 3 ஆண்டுகளுக்கு அவரது ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி  தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: