வாரிசு சான்றிதழ் வாங்கித்தருவதாக கூறி ரூ.49 லட்சம் மோசடி செய்த வக்கீல் மீது வழக்கு: உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு தகவல்

சென்னை:  வாரிசு சான்றிதழ் வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் வக்கீல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்தவர் லூயிஸ் அந்தோணிராஜ் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய மனைவியின் சித்தப்பா உத்தம்சிங் என்ற பால்ராஜ் என்பவருக்கு வாரிசுகள் இல்லை.  அவருக்கு சொத்துகள் உள்ளன. இந்நிலையில் அவர் இறந்து விட்டார். இதையடுத்து, எனது மனைவிக்கு வாரிசு சான்றிதழ் பெற வக்கீல் இளங்கோவன் என்பவரை அணுகினோம். அவர் எல்லா சான்றிதழ்களையும் வாங்கித் தருவதாக கூறி  எங்களிடம் கடந்த 2017ல் ரூ.19 லட்சத்தை முன்பணமாக வாங்கினார்.

பின்னர் எனது ரூ.14.50 லட்சம் மதிப்புள்ள காரையும் இரவல் கேட்டார். அதையும் கொடுத்தோம். அந்த காரை திரும்ப தரவில்லை. இதேபோல், எனது மளிகை கடையை அவர் எடுத்துக்கொண்டார். இப்படி மொத்தம் ₹49 லட்சம்வரை  வாங்கிக்கொண்ட அவர் வாரிசு சான்றிதழ் பெற்றுத்தரவில்லை. இதையடுத்து, அவர் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுத்தேன். அந்த மனு சம்மந்தப்பட்ட போலீசாருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், எனது புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் ஐயப்பராஜ் ஆஜராகி, சம்பந்தப்பட்ட வக்கீல் மீது பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.

Related Stories: