நிலக்கோட்டை அருகே குடும்பத்தினர் கண் முன் பரிதாபம் வைகையாற்றில் மூழ்கி சென்னை சகோதரர்கள் பலி

வத்தலக்குண்டு:  நிலக்கோட்டை அருகே குடும்பத்தினர் கண்முன் வைகையாற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த அண்ணன், தம்பி பலியாகினர். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மாரியப்பன். ஜவுளி வியாபாரி. இவர், மனைவி, மூத்த மகன் ஜெகன் என்ற சதீஷ்குமார் (35), இவரது மனைவி புவனேஸ்வரி, ஒரு பெண் குழந்தை மற்றும் இளைய மகன் குமரேசன் (32), இவரது  மனைவி தீபா, இவர்களது ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் ஆகிய 9 பேர், நேற்று திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு சாமி கும்பிட

வந்தனர். முன்னதாக கோயில் அருகே வைகை ஆற்றில் குடும்பத்துடன் குளித்தனர். ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. அப்போது ஆற்றில் குளித்த 2 பெண்களை தண்ணீர் இழுத்து சென்றது. அதை கண்ட ஜெகனும், குமரேசனும் அவர்களை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் தண்ணீரின் வேகத்தில் அந்த 2 பெண்களும் ஆற்றின் மற்றொரு பகுதியில் பத்திரமாக மேட்டில் ஏறி விட்டனர். ஆனால், ஆற்றின் மையத்தில் சென்ற ஜெகனும், குமரேசனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மணல் கொள்ளையர் தோண்டிய 20 அடி பள்ளத்தில் சிக்கி அவர்கள் இறந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

அணையில் கூடுதல் நீர் திறப்பால் வயல்கள் நாசம்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் என்ற இடத்தில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று அதிகாலை 3 மணியளவில் அணையின் நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டதால், கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. கூமாப்பட்டியிலிருந்து பிளவக்கல் செல்லும் சாலையில் கோவிந்தன்மேடு என்ற இடத்தில், கால்வாய் தரைப்பாலத்தில் தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் புகுந்து அரிப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்து நெல் வயலுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலை அரிப்பால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பது உடனடியாக நிறுத்தப்பட்டது. இதால், பட்டுப்பூச்சி நகர், கிழவன்கோவில், பிளவக்கல் பெரியாறு அணை பகுதியில் வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.

தாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த மழையால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடியது. கடனாநதி, ராமநதி ஆகிய அணைகள் நிரம்பி தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காட்டாற்று பகுதிகளில் இருந்து ஓடிவரும் வெள்ள நீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் ெவள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மழைக்கு வீடு இடிந்து பார்வையற்ற முதியவர் பலி: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, சேதுநாராயணபுரத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (65). பார்வையை இழந்தவர். திருமணமாகாத இவர், மண் சுவரிலான கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வத்திராயிருப்பு பகுதியில் பெய்த மழைக்கு முத்துச்சாமியின் வீட்டுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் திடீரென சுவர் இடிந்து இடிபாடுகளில் சிக்கி முத்துச்சாமி உயிரிழந்தார்.

மூல வைகை ஆற்றில் வெள்ளம்

தேனி மாவட்டம், கடமலை - மயிலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அரசரடி, வெள்ளிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழை நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. இதனால் மூலவைகையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருகரைகளையும் தொட்டு கரை புரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம், கரையோரத்தில் உள்ள வயல்களில் புகுந்தது.

Related Stories:

>