2 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை முயற்சி : பேராசிரியர் மீது தாய் புகார்

திருச்சி:  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகள் ஜெனிபர்(19). இவர் திருச்சி காஜாமலை வளாகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலையில்  எம்எஸ்சி  2ம் ஆண்டு படித்து வருகிறார். பல்கலை விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் விடுதி அறையில் மயங்கிய நிலையில் இருந்த ஜெனிபரை சகதோழிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்களிடம் பினாயிலை குடித்து விட்டதாக கூறியுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ஜெனிபர் எழுதி வைத்த 2 பக்க கடிதத்தை கைப்பற்றினர்.  அதில், சரோ, கஜா சாரி டி. உங்களை விட்டு போகிறேன். நாம் எச்ஓடிக்கு எதிராக ஒண்ணும் பண்ண முடியாது.  என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. இப்படி கொடுமைப்படுத்தும் துறைத்தலைவர் மாறுவாரா. நான் போனதற்கு பின்னர் மாறுவாரா. நாளைக்கு உங்களுக்கும் இதே நிலை தான் என எழுதி இருந்தார்.  இதற்கிடையில் ஜெனிபரின் தாய் செல்வி மற்றும் சக மாணவிகள் மற்றும் தோழிகள் நேற்று மாலை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து துறைத்தலைவரான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் கூறி அனுப்பி வைத்தார்.

இதற்கிடையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த மாதம் நடந்த தேர்விற்கான கேள்வி தாள் லீக் ஆகி மாணவர்களின் வாட்ஸ் அப்பில் பரவியது. இதையறிந்த துறைத்தலைவர், அவர்களது செல்ேபானை வாங்கி ஆய்வு செய்தார். அப்போது மாணவிகளின் செல்போனில் சக மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் செல்பி இருந்துள்ளது. இதுபற்றி அவர் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த ஜெனிபர், பினாயில் குடித்துவிட்டதாக தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஐடியில் படித்து வந்த பாத்திமா என்ற மாணவி கல்லூரி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>