×

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலீஸ்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட முதல் நாளே ஆந்திராவில் இருந்து தரிசனத்திற்கு வந்த 10 இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சபரிமலையில்   இளம்பெண்கள் தரிசனம் செய்யலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர்  28ல் உச்ச   நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து  இளம்பெண்கள்  சபரிமலை சென்றதால் கேரளாவில் கலவரம் வெடித்தது. இதையடுத்து இளம்பெண்களை  அனுமதிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்  தாக்கல்  செய்யப்பட்டது. இதை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த  விசாரணையை 7  பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. இதனால், இதன் இறுதி தீர்ப்பு வரும் வரையில் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்ற முடிவை கேரள அரசு எடுத்துள்ளது. அதையும் மீறி வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் உறுதியாக அறிவித்துள்ளது. இதனால், இளம்பெண்கள் வந்தால் நிலக்கல்லில்  தடுத்து  நிறுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

இந்த  பரபரப்பான சூழ்நிலையில், சபரிமலையில் நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை  திறக்கப்பட்டது. தந்திரி  கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி  வாசுதேவன் நம்பூதிரி நடை  திறந்தார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும்  நடக்கவில்லை. மாலை 6.30  மணியளவில் சபரிமலை கோயில்  மேல்சாந்தியாக சுதீர்  நம்பூதிரி பொறுப்பு ஏற்றுக்கொண்டார், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக பொறுப்பு ஏற்கவேண்டிய பரமேஸ்வரன் நம்பூதிரியின் உறவினர் ஒருவர் இறந்ததால் அவர் நேற்று பொறுப்பு ஏற்கவில்லை. நடை  திறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதலே  தமிழ்நாடு, ஆந்திரா,  கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து  சபரிமலைக்கு வந்த பக்தர்கள் நிலக்கல்லில் தங்க  வைக்கப்பட்டனர். நேற்று காலை  11 மணிக்கு பிறகே கேரள அரசு பஸ்கள்  மூலம் பக்தர்கள் பம்பைக்கு செல்ல  அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு  மேல்தான்  சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சபரிமலையில் கடந்த ஆண்டை போல போலீஸ் கெடுபிடி இம்முறை அதிகமாக இல்லை. பம்பையில்  சோதனைச்சாவடி அமைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு சன்னிதானத்தில் பெண் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு சன்னிதான  பாதுகாப்பில், பெண் போலீசார் நியமிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு பக்தர்களை சாமி  என்று போலீசார் அழைக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த  ஆண்டு அப்படி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

இந்நிலையில்,  ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த 25 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர்  பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.  பம்பையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே சென்றபோது பாதுகாப்பு பணியில்  இருந்த பெண் போலீசார், சில இளம் பெண்கள் குழுவில் செல்வதை கவனித்தனர்.  அவர்களை நிறுத்தி அவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆதாரங்களை  பரிசோதித்தபோது 10 பேர் 50 வயதிற்கு குறைவானவர்கள் என்று தெரியவந்தது.  தாங்கள் குடும்பத்தினருடன் வந்ததாகவும், சபரிமலை ஐதீகம் தங்களுக்கு  தெரியாது என்றும் அவர்கள் கூறினர். போலீசார் அவர்களிடம், 50 வயதுக்கு  மேற்பட்டவர்கள் சபரிமலை செல்லக்கூடாது என்று கூறி நிலக்கல்லுக்கு திருப்பி  அனுப்பினர். இதனால் சபரிமலையில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நிலக்கல்லிலும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர்.

பக்தர்கள்  வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அங்கிருந்து கேரள  அரசு பஸ் மூலம்தான் பம்பை செல்லவேண்டும். பஸ்களில் ஏறி பெண் போலீசார் இளம்  பெண்கள் செல்கின்றனரா என்று பரிசோதிக்கின்றனர். இதற்கிடையே  உச்ச நீதிமன்ற  உத்தரவை வரவேற்கும் வகையில் நேற்று மாலை கேரளா முழுவதும் சபரிமலை கர்ம  சமிதி சார்பில் நாம  ஜெப ஊர்வலம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆச்சாரங்கள் அமலில் இருக்க வேண்டும்

பழைய  மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கூறியதாவது: சபரிமலை கோயிலுக்கு என்று தனி  ஆச்சாரங்கள் உள்ளன. இங்கு 50 வயதிற்கு குறைவான இளம் பெண்கள் தரிசனம் செய்யக்கூடாது. பல நூற்றாண்டுகளாக இந்த ஐதீகம் கடை பிடிக்கப்பட்டு  வருகிறது. இந்த ஆச்சாரங்கள் தொடர்ந்து அமலில் இருக்கவேண்டும்.

பம்பையில் சோதனைச்சாவடி அமைக்க மாட்டோம்: டிஜிபி

கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா கொச்சியில் கூறியதாவது: இம்முறை இளம்பெண்கள் வந்தால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பம்பையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட மாட்டாது.


Tags : walk ,Sabarimala ,Mandal Pooja , Police ,10 women , Sabarimala walk , Mandal Pooja
× RELATED அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்..